கஸானா, புரோட்டோனில் வைத்துள்ள பங்குரிமையை டிஆர்பி-இடம் விற்கும்

மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா நேசனல், புரோட்டோன் ஹோடிங்சில் அதற்குள்ள 42.7 விழுக்காட்டுப் பங்குரிமையை டிஆர்பி-ஹைகோம்மிடம் விற்பனை செய்யும். த ஸ்டார் செய்தித்தாள் புரோட்டோன் அலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை மேற்கோள் காட்டி இதனை அறிவித்துள்ளது.

புரோட்டோனுக்கு ஆராய்ச்சிப் பணிகளில்  ஈடுபடவும் புதிய கார்கள் போன்றவற்றைத் தயாரிக்கவும் பணம் தேவைப்படுகிறது. ஆனால்,கஸானா மேலும் அதில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றும் அதனாலேயே அது அதன் பங்குரினையை விற்க முனைந்துள்ளது என்றும் முன்னாள் பிரதமர் மகாதீர் கூறியதாக அது தெரிவித்தது.

“என் கவலை எல்லாம் வாங்கும் நிறுவனத்திடம்(டிஆர்பி-ஹைகோம்) பணம் இருக்க வேண்டுமே என்பதுதான். ஏனென்றால், சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்தே பங்குகளை வாங்க வேண்டியிருக்கும்.அதனால் ஆதாயம் பெறுவதிலும் சிரமம் இருக்கும்”, என்று மகாதிர் கூறினார்.

“ஆனாலும், டிஆர்பி-ஹைகோமின் ஆற்றலில் எனக்கு நம்பிக்கை  உண்டு”,என்றாரவர்.

இதன் தொடர்பில், புரோட்டோன் கருத்துரைக்க தயாராக இல்லை. கஸானா நேசனலைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

கஸானா நேசனல், இதற்குமுன் தன்னிடமுள்ள புரோட்டோன் பங்குகளை விற்பதற்கு சைம் டார்பி, நாசா குழுமம், ஹுயுண்டாய் பெர்ஜெயா சென். பெர்ஹாட், யுஎம்டபல்யு முதலிய நிறுவனங்களையும் அணுகியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

காலை 9 மணிக்கு பங்குச் சந்தையில் பொதுவாக 0.5விழுக்காடு விலை உயர்வு நிலவிய வேளையில் புரோட்டோன் பங்குகள் 4.3விழுக்காடு விலை உயர்ந்து ரிம4.16-க்கு விற்கப்பட்டன.

-ராய்ட்டர்ஸ்