நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பிரதமர் முஹிதீன் யாசின் இழந்துவிட்டதாக, இன்று, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
முஹைதீன் நிர்வாகத்திற்கான ஆதரவை எம்.பி.க்கள் திரும்பப் பெற்றதால், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு கவிழ்ந்துவிட்டதாக அன்வர் கூறினார்
“எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மஹியாடின் அரசாங்கம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்க, இன்று நாங்கள் இங்குக் கூடியுள்ளோம். மேலும் பிறக் கட்சிகளும், பி.என்.-ஐ விட்டு வெளியேற விரும்புவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
“எனவே, இங்கே நாங்கள் 107 பேர், அவர்களையும் சேர்த்தால்…. அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இன்று காலை, நாடாளுமன்றத்திற்கு ஊர்வலமாகச் செல்வதற்கு முன்னதாக, மெர்டேக்கா சதுக்கத்தில் கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முன்னிலையில் அவர் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு, ஒரு சில பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) எம்பி-க்களின் கட்சித்தாவல் நடவடிக்கை மூலம் ஆட்சியைப் பிடித்த தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்து எதிர்க்கட்சி முன்பு பலமுறை கேள்வி எழுப்பியது.
கடந்த செப்டம்பரில், அன்வர் அதிகாரத்தைத் திரும்பப் பெறுவதற்குப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார்.
அன்வர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இன்று மெர்டேக்கா சதுக்கத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றனர், ஆனால் ஃப்.ஆர்.யு. உறுப்பினர்கள் உட்பட போலீஸ் கட்டுப்பாடுகளால் அவர்களின் முயற்சிகள் தடைபட்டன.
கடந்த வாரம், மாட்சிமை தங்கிய மாமன்னரின் கண்டனங்களைப் பெற்ற பிறகு, முஹிதின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
நாடாளுமன்றம் அமர்வதைத் தடுக்க, முஹைதீன் கோவிட் -19 பிரச்சினையை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதாக அன்வர், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் டிஏபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் முன்பு கூறியிருந்தனர்.