அமைச்சரவையின் ஆலோசனைப்படி, ஜூலை 23 அன்று அவசரகாலக் கட்டளைகளை மாமன்னர் இரத்து செய்யும் செயல்முறையை முடிக்க முடியவில்லை என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் அடிப்படையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி, அவசரநிலை பிரகடனம் முடிவடைந்த நிலையில், மாமன்னர் ஆணைகளை இரத்து செய்யும் பிரச்சனைகள் இனி எழாது என்று அவர் கூறினார்.
எனவே, அகோங்கின் ஆணை மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 150 (3)-க்கு இணங்க, இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவசரகாலக் கட்டளைகளை விவாதித்து அகற்றுவதற்கான ஒரு பிரேரணை கொண்டு வரப்படலாம் என்றார்.
“நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் இந்தப் பிரேரணை, அவசரகாலச் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான சர்ச்சையை இணக்கமான மற்றும் அரசியலமைப்பு முறையில் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜூலை 21-ம் தேதி அவசரகாலச் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக அரசு கூறியதை அடுத்து, நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், அகோங்கின் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்த, அரண்மனை ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டது.
அரண்மனையின் கூற்றுபடி, மன்னர் தனது ஒப்புதலை வழங்கவில்லை, ஏனென்றால் அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ), அவர்களின் நடவடிக்கைகள் சட்ட முறைபடியும் அரசியலமைப்புக்கு ஏற்பவும் அமிந்தது என்று பாதுகாத்தது.
பிஎம்ஓ, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40 (1)-இன் படி, அகோங் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும் என்று வாதிட்டது.