பல அம்னோ எம்.பி.க்கள் முஹைதீன் யாசின் பிரதமராக இருக்க வேண்டாம் என்ற தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அந்தப் பெர்சத்து தலைவரின் இல்லத்திற்குப் பல உயர்மட்ட நபர்கள் சென்றனர்.
கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாராவில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்தவர்களில், அம்னோ துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான இஸ்மாயில் சப்ரி யாகோப்பும் அடங்குவார் என மலேசியாகினி கண்டறிந்துள்ளது.
சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருனை ஏற்றிச்சென்ற வாகனமும் காணப்பட்டது.
உள்துறை அமைச்சரும் பெர்சத்து தலைமைச் செயலச்ருமான ஹம்சா ஜைனுடின், சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி மற்றும் நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் போன்றோரும் பிரதமர் இல்லைத்திற்கு வருகை தந்தனர்.
கல்வி அமைச்சரும் பெர்சத்து உதவித் தலைவருமான ராட்ஸி ஜிடின், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சரும் பெர்சத்து மகளிர் தலைவருமான ரீனா ஹருண், ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசல் அஜுமு ஆகியோரும் அங்குச் சென்றனர்.
மாமன்னரிடம், முஹைதீனுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பித்ததாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அறிவித்த பின்னர், இரவில் இந்தக் கூட்டம் உடனடியாக நடைபெற்றது.
இன்று மாலை, லெங்கோங் எம்.பி. ஷம்சுல் அனுவார் நசாரா, கட்சி முடிவு செய்தபடி அரசாங்கப் பதவியிலிருந்து இராஜினாமா செய்த அம்னோவின் முதல் அமைச்சரவை உறுப்பினர் ஆவார்.