ஆகஸ்ட் 16-க்குள் முஹைதீன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் – எம்.பி.

இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் மக்களவை அமர்வு நடத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

அந்த நாடாளுமன்ற அமர்வு, ஆறு அவசரகாலக் கட்டளைகளை இரத்து செய்வதையும், பிரதமர் முஹைதீன் யாசின் தனக்கான பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களின் ஆதரவைக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது என்று அந்த மூத்த டிஏபி தலைவர் விளக்கினார்.

கட்சியின் 11 எம்.பி.க்கள் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றனர் மற்றும் அவர்களின் அறிவிப்பு கடிதங்கள் அரண்மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது.

“ஆறு மாதக் காலமாக, பல நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகள் மற்றும் அவசர உத்தரவுகளுக்குப் பிறகும், நம்மிடையே 1,163,291 கோவிட் -19 நேர்வுகளும் 9,598 இறப்புகளும் உள்ளன.

“கடந்த நவம்பரில், கோவிட் -19 நேர்வுகள் அதிகம் உள்ள நாடுகளில் 85-வது இடத்தில் இருந்தோம், இன்று நாம் 27-வது இடத்தில் உள்ளோம்.

“ஒவ்வொரு நாளும் புதிய நேர்வுகள் மற்றும் புதியக் கோவிட் -19 இறப்புகளில், மலேசியா உலகின் முன்னிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாகும்,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

முஹைதீன் தலைமையின் கீழ், மலேசியா எந்த ஒரு மெட்ரிக் அடிப்படையிலும், உலகின் மிக மோசமான நாடாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

ஜனவரி 5, 2021 அன்று, மோசமாகி வரும் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளவும், 200,000 முதல் 250,000 கோவிட் -19 நேர்வுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை மலேசியா எட்டுவதைத் தடுக்கவும் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு கூட்டத்தை நான் கோரினேன்.

“அதற்குப் பதிலாக, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதோடு, நாடாளுமன்றமும் இடைநிறுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

யாங் டி-பெர்த்துவான் அகோங் சட்டத்தைப் பற்றி விவாதிக்குமாறு நாடாளுமன்றத்தில் பலமுறை கூறினாலும், அவசரகாலச் சட்டத்தை விவாதிக்கத் தவறியதற்காக தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை லிம் விமர்சித்தார்.

தொற்றுநோயைக் காரணங்கூறி, மக்களவை ஒத்திவைப்பு

“மிகவும் வருந்தத்தக்க வகையில், கோவிட் -19 தொற்றுநோயின் அடிப்படையில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வு ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

“முஹைதீன் யாசினுக்கான அம்னோவின் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அஹ்மத் ஜாஹிட் அறிவித்ததன் மூலம், ஆறு அவசரகாலக் கட்டளைகளை இரத்து செய்யவும், முஹைதீனுக்குப் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதைக் காட்டவும் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 16-க்குப் பிறகு கூட வேண்டும்,” என்று லிம் கூறினார் .

நேற்று, ஜாஹிட்டின் அறிவிப்பைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்ற போதிலும், “தேசியக் கூட்டணி அரசாங்கம் பலமாகவே உள்ளது” என்று அம்னோ எம்.பி. ஸாஹிடி ஸைனுல் அபிடின் கூறினார்.

கோலாலம்பூர், ஶ்ரீ பசிபிக் ஹோட்டலில் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் தேசியக் கூட்டணியை ஆதரிக்கும் அம்னோ எம்.பி.க்களைச் சந்தித்தப் பின்னர், அந்தப் பாடாங் பெசார் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் அக்கூட்டம் முடிந்தது.

முஹைதீனை அவரது இல்லத்தில் சந்தித்தப் பின்னர், இஸ்மாயில் சப்ரி ஹோட்டலுக்கு 12.30 மணியளவில் வந்தார்.