டிஏபி எம்.பி. ஒருவர், பிரதமர் முஹிட்டின் யாசினிடமிருந்து, அம்னோ அரசாங்கத்தை கைப்பற்றும் சாத்தியம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
நேற்றிரவு ஒரு முகநூல் பதிவில், டோனி புவா இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார், இந்த நேரத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குத் துரோகம் செய்த முஹிட்டினை வீழ்த்துவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
இருப்பினும், அடுத்து வரவிருக்கும் வாரங்களில் விளைவுகளைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.
அவர் (முஹிட்டின்) பதவி விலகினால், பிரதமர் பதவிக்கு அம்னோ தயார் நிலையில் இருப்பது போல் தோன்றவில்லையா?
“அம்னோ தலைவர் பிரதமராகும்போது, அனைத்து ஊழல்வாதிகளும் விடுவிக்கப்பட மாட்டார்களா அல்லது அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற மாட்டார்களா?
“அம்னோ மீண்டும் அரசாங்கத்தின் முக்கியத் தலைவராக வரும்போது, அடுத்தத் தேர்தலுக்கு, அதன் அரசியல் பலத்தை மேலும் வலுப்படுத்தும்,” என்று புவா எழுதியுள்ளார்.
தற்போது, அம்னோ மக்களவையில் 38 இடங்களைக் கொண்டுள்ளது, ஆனால் கட்சி இரண்டு கோட்டைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது – ஒன்று முஹிட்டினுக்கு ஆதரவளிக்கிறது, மற்றொன்று எதிர்க்கின்றது.
11 அம்னோ எம்.பிக்களின் ஆதரவைத் திரும்பப் பெறுவதால், முஹிட்டினின் பெரும்பான்மை அசைந்து காணப்படுகிறது.
அம்னோ அரசாங்கத்தைக் கைப்பற்றுவதிலிருந்து தடுக்கு, அடுத்த பொதுத் தேர்தல் வரை முஹிட்டினின் நிர்வாகத்தைப் “பொறுத்துக்கொள்வது”தான் சிறந்த வழி என்று புவா கூறினார்.
“அரசியல் கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் ஊழல்வாதிகளிடம் திரும்ப இழக்காமல் இருக்க, திறமையற்ற மற்றும் துரோகம் இழைத்தத் தேசியக் கூட்டணி நிர்வாகத்தைச் சிறிது காலம் நாம் சகித்துக் கொள்ளலாமா? ஒரு படி முன்னோக்கி நாம் யோசிக்க வேண்டும்.
“இது அம்னோவை விழிப்புடன் வைக்கும், அதே நேரத்தில் பக்காத்தான் ஹராப்பானும் மக்களும் அடுத்தத் தேர்தலில் முஹிட்டின் மற்றும் அஸ்மின் அலியை வெளியேற்ற முடியும்.
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? விவாதிக்கலாம், வாருங்கள்,” என்று புவா தனது முகநூல் பதிவில் மேலும் கூறினார்.