சிலாங்கூர் மாநில அரசால் நடத்தப்படும் சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) மூலம், கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஆவணமற்ற வெளிநாட்டினர் அல்லது புலம்பெயர்ந்தோர் இலவசக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறலாம்.
பொது சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் சித்தி மரியா மஹ்முட்டின் கூற்றுப்படி, அவர்கள் ‘செலங்கா’ (Selangkah) விண்ணப்பம் மூலம் பதிவு செய்து, ஆகஸ்ட் 10 முதல் 13 வரை பி.கே.என்.எஸ். வளாகத்தில் தடுப்பூசி திட்டத்தில் கலந்துகொள்ளலாம்.
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானின் சில பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமே கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் இருப்பதாகக் கருதப்படும், கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் செல்வாக்ஸ் தடுப்பூசியைப் பெற முடியும் என்ற அரசின் அறிவிப்பு குறித்து விளக்கம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஆவணங்கள் அல்லது கடப்பிதழ் இல்லாதவர்கள், தங்கள் தொலைபேசி எண்களைச் செலாங்காவில் அடையாளமாகப் பயன்படுத்தலாம் என்று சித்தி மரியா கூறினார்.
“முதல் மற்றும் இரண்டாவது மருந்தளவுகளுக்குப் பயன்படுத்தப்படும் பெயர் மற்றும் தொலைபேசி எண் சீராக இருக்க வேண்டும்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அவர்கள் பி.கே.என்.எஸ். விளையாட்டு வளாகத் தடுப்பூசி மையத்தைத் தேர்ந்தெடுத்து, செலாங்காவில் பதிவு செய்யும் போது SELVAXBWNPKNS குறியீட்டை உள்ளிட வேண்டும்.
மலேசியாவில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்படும் அகதிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
யு.என்.சி.எச்.ஆர். தகவல் படி, சுமார் 70,101 அகதிகள் சிலாங்கூரில் வாழ்கின்றனர்.
இதற்கிடையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகளின் தரவை அரசாங்கம் வெளியிடவில்லை.
இருப்பினும், சிலாங்கூரில் சுமார் 448,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாகப் புள்ளியியல் துறை கூறியது.
ஆவணமற்ற வெளிநாட்டினர் தவிர, நாட்டில் சட்டப்பூர்வமாக இருக்கும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் சிலரிடம் கடப்பிதழ்கள் இல்லாமல் இருக்கலாம், அவர்களின் முகவர்கள் அல்லது முதலாளிகள் கடப்பிதழ்களை வைத்திருக்கலாம்.
கிள்ளாங் பள்ளத்தாக்கில் ‘வாக் இன் ’ தடுப்பூசி மையங்கள்
சிலாங்கூரின் இந்த முன்னெடுப்புகள், மத்திய அரசின் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்திற்கு (பிக்) உதவும் வகையில் அமைந்துள்ளது.
மலேசியாவில், கோவிட் -19 தொற்று அதிகமாக உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கில், தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பதற்கான நாட்டின் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.
தடுப்பூசிக்குப் பதிவு செய்யாதவர்கள் உட்பட, இன்னும் தடுப்பூசி போடப்படாதவர்களும் அதைப் பெறுவதை உறுதி செய்ய, ஆகஸ்ட் 2 முதல் 22 வரை, 10 ‘பிக்’ தடுப்பூசி மையங்களில், மதியம் 2 மணி தொடங்கி ‘வாக்-இன்’ தடுப்பூசிகள் அனுமதிக்கப்படுகின்றன.
அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கிறார் என்பதை நிரூபிக்க, பயன்பாட்டு பில்கள் (மின்சாரம் / நீர்), வேலை அனுமதி சீட்டு, வாடகை ஒப்பந்தங்கள் போன்றவற்றை உடன் கொண்டுவர வேண்டும் என்பது ஒரு நிபந்தனை ஆகும்.
‘வாக்-இன்’ தடுப்பூசி மையங்களின் பட்டியல் :-
* கோலாலம்பூர் மாநாட்டு மையம் (HCO F);
* கோலாலம்பூர் மாநாட்டு மையம் (HCO G);
* கோலாலம்பூர் மாநாட்டு மையம் (HCO H);
* பாங்கி அவென்யூ மாநாட்டு மையம் (பிஏசிசி);
* விந்தம் ஹோட்டல் (Hotel Wyndham), கிள்ளான்;
* துன் ரசாக் மண்டபம், சபாக் பெர்ணம்;
* செரெண்டா சமூக மண்டபம்;
* மூவென்பிக் ஹோட்டல் (Movenpick Hotel) மற்றும் கே.எல்.ஐ.ஏ. மாநாட்டு மையம், செப்பாங்;
* ஐடில் மாநாட்டு மையம், ஷா ஆலம் (IDCC); மற்றும்
* புக்கிட் ஜாலீல் தேசிய அரங்கம் (ஆகஸ்ட் 9 முதல் 22 வரை குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மட்டும்)
இருப்பினும், வயது மற்றும் குடியுரிமைக்கு ஏற்ப, ‘பிக்’கின் கீழ் ‘வாக்-இன்’ தடுப்பூசிகள் அனுமதிக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குடிமக்கள் தடுப்பூசியில் கலந்து கொள்ளலாம், அதே நேரத்தில் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் அல்லாதவர்கள் ஆகஸ்ட் 9 முதல் மட்டுமே தடுப்பூசியில் கலந்துகொள்ள முடியும்.
18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கின் குடிமக்கள், ஆகஸ்ட் 5 முதல் தடுப்பூசிகளைப் பெற ‘வாக்-இன்’-இல் கலந்துகொள்ளலாம், அதே நேரத்தில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் அல்லாதவர்கள் ஆகஸ்ட் 12 முதல் பெற்றுக்கொள்ளலாம்.
தடுப்பூசி மையங்களுக்கு ‘வாக்-இன்’ செய்யும் ஆவணமற்ற வெளிநாட்டவர்களைக் குடிநுழைவுத் துறை கண்காணிப்பதாகக் கூறப்படுவதால், அவர்களிடையே கவலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் கடந்த வாரம், குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் டிஸைமி டாவுட், தடுப்பூசி மையங்களில் ‘பிக்’ திட்டத்தைக் குழப்பவோ அல்லது ஆவணமற்ற வெளிநாட்டவர்களைத் தடுத்து வைக்கவோ அதிகாரிகளை அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்.