பெரும்பான்மை ஆதரவு : முஹிட்டின் உண்மையைச் சொல்லவில்லை, பேரரசரைக் குழப்புகிறார் – பி.எச்.

தனக்கு ஆதரவளித்த எம்.பி.க்களின் எண்ணிக்கை குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசரைத் தவறாக வழிநடத்தியதற்காக, பிரதமர் முஹிட்டின் யாசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பி.எச். அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவையில் அவருக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக முஹிட்டின் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது.

ஆதரவை மாற்றுமாறு எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் – “ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு கட்டுபடாமல்” – அமலாக்க அமைப்புகள் நடுநிலையாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பி.எச். வலியுறுத்தியது.

“முஹிட்டினை ஆதரிக்காத பி.எச். மற்றும் எதிர்க்கட்சியினர் அனைவரின் எண்ணிக்கையையும் கவனமாக பார்த்த பிறகு, அவர் உண்மையைச் சொல்லவில்லை என்றும், நேற்றைக்கு மன்னரைச் சந்தித்தபோது, அவர் மன்னரிடம் தவறானத் தகவலை வழங்கியுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

இது நாட்டின் முக்கியத் தலைவருக்கு எதிரான உச்சக்கட்ட, கிளர்ச்சியூட்டும் செயலாகும், அதை மன்னிக்கக் கூடாது,” என்று பிஎச் தலைமை மன்றம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தச் செப்டம்பர் அமர்வில், வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் தன் மீதான நம்பிக்கை ஆதரவு அளவைச் சோதிக்கத் தயாராக இருப்பதாகவும் முஹிட்டின் நேற்று கூறினார்.

முஹிட்டினின் அறிவிப்பு, அம்னோ தேசியக் கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற ஒரு நாள் கழித்து வெளியானது.

நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போது செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது உருவாக்கப்படாத வரை, அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று பி.எச். மேலும் கூறியது.