ஒட்டுமொத்த மலேசியாவும் ‘குழப்பத்தில்’ – எம் சரவணன்

ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தேசியக் கூட்டணி அரசு மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது, மலேசியர்களைக் குழப்பமடைய செய்துள்ளது என்றார்.

அம்னோ, மசீச உட்பட ம.இ.கா. உறுப்பினர்களின் மிகப்பெரிய கேள்வி, அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் நமது திசை எது?

“நம்மிடம் 41 இடங்கள் உள்ளன. 41 இடங்களுடன், பெர்சத்து, டிஏபியுடன் இருக்க அம்னோ விரும்பவில்லை, பிகேஆருடன் இணைந்து வேலை செய்ய முடியாது. எனவே, 41 இடங்களுடன், நமது திசை எது? இது ஒரு மக்கள் பிரதிநிதியாக என்னிடம் உள்ள கேள்வி, கட்சி உறுப்பினர்களிடம் நான் விளக்க வேண்டும்.

“நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலேசியாவும் குழப்பத்தில் உள்ளது, பிஎன்-இன் நிலைப்பாடு என்ன? அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், புதிய அரசாங்கம் அமைக்க எந்தவொரு கட்சியும் நம்முடன் இல்லை. என்ன நடக்கப் போகிறது?” என்று அவர் இன்று கோலாலம்பூரில், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த தாப்பா எம்.பி. கலந்துகொண்டார்.

இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் வரை, தேசிய முன்னணியின் 31 எம்.பி.க்களும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக இஸ்மாயில் சப்ரி இன்று அறிவித்தார்.

மசீசவைச் சேர்ந்த இருவர், ம.இ.கா. 1 மற்றும் பிபிஆர்எஸ் 1 உட்பட, 31 தேசிய முன்னணி எம்.பி.க்களின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையில், தாப்பா அம்னோ பிரிவுத் தலைவர் இஷாம் ஷாருட்டின், தேசியக் கூட்டணி மற்றும் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் அம்னோ உச்சமன்றக் குழுவின் முடிவை முழுமையாக ஆதரிப்பதாக சொன்னார்.