பிரதமரின் ஆலோசகராக ஃபைசல் : ‘மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது’

அஹ்மத் ஃபைசல் அசுமுவைப் பிரதமரின் சிறப்பு ஆலோசகராக நியமிப்பது, பிரதமர் முஹைதீன் யாசினுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான பரிசாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நாசுதியோன், முஹைதீன் அமைச்சர் அந்தஸ்தில் ஓர் ஆலோசகரை நியமிக்க அவசரத் தேவை எதுவும் இல்லை என்று கூறினார்.

“பிரதமருக்கான ஆதரவைப் பராமரிக்கப் பரிசுகளை வழங்குவதற்கான மற்றொரு அரசியல் இது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

“கோவிட் -19 தொற்றுநோயுடன் போராடும், வேலைகளை இழந்து, வருமானத்தை இழந்துள்ள மக்களின் நலன்களுடன், இந்த நியமனத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று பிரதமரின் சிறப்பு ஆலோசகராக ஃபைசல் நியமனம் குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, பெர்சத்து துணைத் தலைவரான ஃபைசல், சமூக வலைப்பின்னல், சமூகத் தொடர்பு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகிய விஷயங்களில் முஹைதீனுக்கு அறிவுரை வழங்குவார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாரென முஹைதீன் உறுதியளித்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், பேராக் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் முஜாஹித் யூசோப்பும் இந்த நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார், இது மக்களின் பணத்தை வீணடிப்பதாக அவர் விவரித்தார்.

பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜாஹித், பிரதமராக நீடிப்பதே முஹைதீனின் “உயிர்நாடி” என்று கூறினார்.

ஒருவருக்கும் பயனளிக்காதப் பதவிகளை வழங்குவதில், முஹைதீன் ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்பது எனக்கு புரியவில்லை.

“முஹைதீன் அச்சுறுத்தப்படிகிறாரா? அவர்கள் அமைதியாக இருப்பதற்கான ஒரு தீர்வாக முஹைதீன் பதவிகளை வழங்குகிறாரா? இது மக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாகும்; பதவிகளை வழங்குவதன் மூலம் பிரதமர் தனது ‘பதவியை’ தொடர்கிறார்,” என்று அவர் கூறினார்.

நகைச்சுவையான விஷயம், வெட்கக்கேடானது

டிஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் ஹோவர்ட் லீ, இந்த நியமனம் தேசியக் கூட்டணி அரசின் தோல்வியின் பிரதிபலிப்பாகும், ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் இருந்தபோதிலும் இன்னும் கூடுதலான பதவிகள் வழங்கப்படுகின்றன.

“ஏன் நேரடியாக அமைச்சராக நியமிக்கப்படவில்லை? அது அனுமதிக்கப்படாது என்று முஹைதீன் அறிந்திருப்பதாலா?

“தனது கட்சியின் துணைத் தலைவருக்குப் பரிசு வழங்கி, பிரதமர் தனது அரசியல் வாழ்க்கையைத் தற்காக்கிறாரா?

“பெரும்பான்மையை இழந்த ஒரு மாநில அரசாங்கத் தலைவர், பிரதமருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டதிலிருந்து, பெரும்பான்மையினருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது, இது நாட்டை கேலிக்குள்ளாக்கும் நகைச்சுவையாகும்,” என்று பாசிர் பஞ்ஜி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், ஃபைசால் பேராக் ஆட்சிமன்றத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறத் தவறி, மந்திரி பெசார் பதவியை இழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இந்த நியமனத்தைக் கேலி செய்தார்.

“8-வது பிரதமர் (முஹைதீன்), ஏன் திடீரென்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் துணிந்தார் என்பது எனக்கு இப்போது புரிகிறது.

“வெளிப்படையாக, பெரும்பான்மையை இழந்தவர்களுக்குப் பெரும்பான்மையை இழந்தவர்களிடமிருந்து நல்ல ஆலோசனை வழங்கப்படும்,” என்று நஜிப் நேற்று தனது முகநூல் பதிவு ஒன்றின் மூலம் கூறினார்.