இரண்டு பேரணிகள் தொடர்பாக வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்களைப் போலீசார் அழைத்தனர்

அண்மையில் நடந்த இரண்டு பெரிய பேரணிகளின் விசாரணைக்கு உதவ, குறைந்தபட்சம் ஒரு வழக்கறிஞரையும் 20-க்கும் மேற்பட்ட ஊடக ஊழியர்களையும் காவல்துறை அழைத்துள்ளது.

பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்ய வேண்டுமென, கடந்த சனிக்கிழமை, கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட #லாவான் ஆர்ப்பாட்டத்தின் போது, வழக்கறிஞர் மன்றத்தின் கண்காணிப்புக் குழு உறுப்பினரைப் போலீசார் விசாரித்ததை மலேசிய வழக்கறிஞர் மன்றம் உறுதி செய்தது.

இதற்கிடையில், சின்-சியு சீன மொழி நாளிதழ், கடந்த திங்களன்று, 100-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றது தொடர்பாக, 20-க்கும் மேற்பட்ட இயங்கலை மற்றும் அச்சு ஊடகப் பணியாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூர் காவல்துறை தலைமையகம், டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகம் மற்றும் செந்தூல் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் செய்தி அறிக்கைகளை உறுதிப்படுத்தவும் மற்றும் சம்பவத்தின் சாட்சிகளாகவும் விசாரிக்கப்பட்டதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில், அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் அவர்களின் விளக்க அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

முன்னதாக, எம்.பி.க்கள் அணிவகுப்பு தொடர்பாக, 206 புகார் அறிக்கைகள் போலீசாருக்குக் கிடைத்ததாக, காவல்துறை தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சனி கூறினார்.

இது தொடர்பான வளர்ச்சியில், மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஏஜி காளிதாஸ், வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூ #லாவான் பேரணியின் போது அவர் மேற்கொண்ட கண்காணிப்பு குறித்து டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டதாக கூறினார்.

பங்கேற்பாளர்கள், அதிகாரிகள், ஏற்பாட்டாளர்கள் அல்லது பிறரால், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை மற்றும் மீறப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த பொதுக் கூட்டங்களைக் கண்காணிக்க வழக்கறிஞர் மன்றம் தனது கண்காணிப்புக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று காளிதாஸ் கூறினார்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஏஜி காளிதாஸ்

“மலேசிய வழக்கறிஞர் மன்ற வழக்கப்படி, 2021 ஜூலை 30-ம் தேதி, நாங்கள் காவற்படைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதில், அந்த நாளில் (#லாவான் பேரணி) எங்கள் கண்காணிப்புக் குழு அங்கு இருக்கும் என்பதை அவருக்கு நாங்கள் அறிவித்தோம்.

“ஆகையால், முன்னதாகத் தகவல் கொடுத்தபோதிலும், எங்கள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆண்ட்ரூ கூவை, ஆகஸ்ட் 5, 2021 அன்று, டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகத்திற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 111-ன் கீழ் விசாரணைக்கு அழைத்ததில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது,” என்று காளிதாஸ் கூறினார்.