பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறும் கட்சியின் முடிவைத் தொடர்ந்து, மற்றொரு அம்னோ தலைவர் அரசாங்கப் பதவியை இராஜினாமா செய்தார்.
பாலிக் புலாவ் அம்னோ பிரிவுத் தலைவர், ஷா ஹீடான் அயூப் ஹுசைன் ஷா, நேற்று இரவு மலேசியப் புத்ரா பல்கலைக்கழக வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நேற்றிரவு, முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு கட்சியின் உறுப்பினராக, கட்சியின் எந்த முடிவையும் மதிக்க வேண்டும், எனது பொறுப்பை நான் ஏற்கிறேன்.
நேற்று தேதியிட்ட தனது உடனடி பதவி விலகல் கடிதத்தையும் முகநூலில் அவர் பகிர்ந்து கொண்டார்.
அரசுடன் இணைக்கப்பட்ட பல நிறுவனங்களில் இருந்து, தங்கள் நியமனங்களை இராஜினாமா செய்த, சில அம்னோ தலைவர்களின் அடிச்சுவடுகளை ஷா ஹீடான் பின்பற்றியுள்ளார்.
முன்னதாக, அம்னோ உதவித் தலைவர் மொஹமட் காலிட் நோர்டின், போஸ்டீட் ஹோல்டிங் பெர்ஹாட் தலைவர் பதவியிலிருந்து விலகினார், சபா அம்னோ இளைஞர் தலைவர் அப்துல் அஜீஸ் ஜுல்கர்நாய்ன் சுயாதீன மற்றும் நிர்வாகமல்லாத இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தார், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரஃபியி ஆயுதப்படை நிதி வாரியக்குழுவின் (எல்.தி.ஏ.தி.) நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, கட்சியின் 11 சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரதமருக்கான ஆதரவைத் திரும்பப் பெறச் செய்ததை அடுத்து இந்த பதவி விலகல்கள் நடக்கின்றன.
அமைச்சரவை மட்டத்தில், லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் அனுவார் நசாரா, கடந்த செவ்வாய்க்கிழமை எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து, பாரிட் சுலோங் நாடாளுமன்ற உறுப்பினர் நொரைய்னி அஹ்மத் உயர்க்கல்வி அமைச்சர் பதவியை நேற்று இராஜினாமா செய்தார்.