பிஎன் அரசாங்கம் வீழ்ந்தாலும், நாட்டின் நிர்வாகம் தொடர்ந்து செயல்படும் – ஜாஹித்

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் ஆட்சியில் இல்லை என்றால், நாட்டின் நிர்வாகம் முடங்கிபோகும் என்றக் குற்றச்சாட்டுகளை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்தார்.

“இது உண்மையில்லை. இது ஓர் உணர்வு, பிரச்சாரக் குழு மக்களை அச்சுறுத்தும் வகையில் இதனை வடிவமைக்க முயற்சிக்கிறது.

“அதிகாரம், நிலை மற்றும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, ஒரு குழுவால் இந்தப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“பி.என். அரசாங்கம் இனி ஆட்சியில் இல்லை என்றாலும், நாட்டின் நிர்வாகம் அமைச்சின் தலைமைச் செயலாளரின் கீழ் தற்காலிகமாகச் செயல்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

பிப்ரவரி 2020-இல், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னரும், நாட்டின் நிர்வாகம் செயல்பட்டது என்று ஜாஹிட் ஓர் உதாரணத்தைக் கொடுத்தார்.

அதேபோல், தேசிய முன்னணி அரசாங்கம் மே, 2018-இல் சரிந்தபோதும் நடந்தது.

“அவர்கள் பொய்களால் (மீண்டும்) மக்களைக் குழப்ப முயற்சிக்கின்றனர், இது மிகவும் பொறுப்பற்ற செயல்,” என்று ஜாஹிட் கூறினார்.

முஹைதீன் யாசினைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கும் அம்னோ குழுவிற்கு ஜாஹிட் தலைமை தாங்கினார்.

இருந்தும், துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அம்னோ எம்.பி.க்கள் முஹைதீனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேசிய கூட்டணியைத் தற்காப்பவர்கள், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகள் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்று வாதிடுகின்றனர்.

அரசாங்கம் இல்லை என்றால், மாமன்னர் ஒரு பிரதமரை அல்லது ஓர் இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது முந்தைய நடைமுறை, அதனால் நாட்டின் நிர்வாகம் தொடரும்.

உதாரணமாக, அரசியல் கட்சிகள் கூட்டணியை உருவாக்க முடியாமல் போனதன் விளைவாக, இரண்டு முறை அரசாங்கம் இல்லாத அனுபவம் பெல்ஜியம் நாட்டிற்கு உள்ளது.

அந்நிலையில், நாட்டை ஆள ஒரு தற்காலிகப் பிரதமர் நியமிக்கப்படுவார்.