பிகேஆர் : ‘ஐந்து எம்.பி.க்களை வாங்கும் முயற்சி, வெட்கக்கேடான செயல்’

பிரதமர் முஹைதீனை ஆதரிப்பதற்காக, தனது கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்களை ‘வாங்க’ முயற்சிப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

பல டிஏபி எம்.பி.க்கள், தங்களுக்கு அமைச்சர் பதவிகள் உட்பட, பல பரிசுகள் வழங்கப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து சைஃபுதீன் இதனை வெளிப்படுத்தினார்.

“எம்.பி.க்களை வாங்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில், பிகேஆரின் பல மக்களவை உறுப்பினர்கள் பதவி வாய்ப்புகள் மற்றும் பண அன்பளிப்புடன் தொடர்பு கொள்ளப்பட்டனர்.

“இது சிறிதும் வெட்கமில்லாமல், தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடர, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் மேற்கொள்ளும் துணிச்சலான நடவடிக்கை என்பது தெளிவாகிறது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

லியோ ஹ்சியாட் ஹுய் (உலு சிலாங்கூர்), அஸ்மான் இஸ்மாயில் (கோல கெடா), சான் மிங் காய் (அலோர் ஸ்டார்), முஹம்மது பக்தியார் வான் சிக் (பாலிக் புலாவ்) மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் (செத்தியவங்சா) ஆகியோரே அந்த ஐந்து பிகேஆர் எம்.பி.க்கள் என்று சைஃபுதீன் கூறினார்.

“அழைப்புகள் ஒரே தொலைபேசி எண்ணிலிருந்து வந்தன, ஆனால் வெவ்வேறு வசனங்கள்.

“சிலருக்கு இப்போது காலியான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

நேற்று, நான்கு டிஏபி உறுப்பினர்கள், அதாவது எம் குலசேகரன் (ஈப்போ பாராட்), வாங் கா வோ (ஈப்போ தீமோர்), கூ போய் தியோங் (கோத்த மலாக்கா) மற்றும் கெல்வின் யீ (கூச்சிங்) ஆகியோர் பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்க 30 மில்லியன் ரிங்கிட் வரை சலுகை பெற்றதாகக் கூறினர்.

அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அம்னோ உச்சமன்றம் பிஎன் மற்றும் முஹைதீன் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக அறிவித்த பின்னர், மக்களவையில் பிரதமரின் பெரும்பான்மை ஆதரவு கேள்விக்குறியானது.

அதைத் தொடர்ந்து, முஹைதீன், தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வரும் செப்டம்பரில் மக்களவையில் தனது தரப்பு நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டுவரும் என்று கூறினார்.

ஆனால், எதிர்க்கட்சிகள், அஹ்மத் ஜாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட பல அம்னோ தலைவர்கள் முஹிதீனை விரைவில் நாடாளுமன்ற அமர்வை நடத்த வலியுறுத்தினர்.

நேற்று தனது முகநூலில், பரிசு வழங்கும் முயற்சியே முஹைதீன் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தாமதப்படுத்த விரும்புவதற்குக் காரணம் என்று சைஃபுதீன் கூறினார்.

“இதனால்தான் (எதிர்க்கட்சி எம்.பி.க்களை வாங்குவது), செப்டம்பர் மாதம் பிரதமர் முஹைதீன் யாசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டார்.

“மலாய் முஸ்லீம் அச்சுறுத்தலுக்குள்ளானது. அதிகாரம், பதவி மற்றும் வெகுமதிகள் போராட்டத்தின் நோக்கம் என்றானது.

“பிஎன் அரசாங்கத்தின் திரைக்குப் பின்னால் உள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்திய அனைத்து எம்.பி.க்களையும் நான் வாழ்த்துகிறேன், இதனால் நாடு கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்டுள்ளபோது, அரசியல் அதிகாரத்தை இழப்பது குறித்து அதிகம் கவலைப்படும், தங்கள் பிரதிநிதிகளின் அருவருப்பான அரசியலை மக்கள் அடையாளம் காணமுடிகிறது,” என்று அவர் கூறினார்.

இதுவரை, 13 அம்னோ எம்.பி.க்கள் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

தற்போது, பிஎன் அரசாங்கத்தை நிராகரித்த மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, எதிர்க்கட்சிகள் உட்பட 118-ஆக உள்ளது.