அம்னோ தேர்தல்களை 18 மாதங்களுக்கு ஒத்திவைப்பது செல்லாது என்று தீர்ப்பளித்த சங்கங்கள் பதிவுத் துறையின் (ஆர்ஓஎஸ்.) நடவடிக்கையைத் தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெர்சே விமர்சித்தது.
ஓர் அறிக்கையில், அத்தேர்தல் கண்காணிப்பு குழு, இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விவரித்தது.
“ஆர்ஓஎஸ் முடிவு, அம்னோ பிரதமர் முஹிதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற சிறிது நேரத்திலேயே அறிவிக்கப்பட்டது, இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
“புதியக் கட்சிகள், கூட்டணிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பதிவுகளைத் தடுப்பதற்கும், கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கும், அவர்களின் அரசியல் முதலாளியான உள்துறை அமைச்சின் (கேடிஎன்) வழிகாட்டுதலின் கீழ், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளின் வரலாற்றில், சமீபத்திய முயற்சியே ஆர்ஓஎஸ்-இன் இந்த முடிவு.
“அதிகாரத்தின் நிர்வாகக் கிளைகள், அவர்களின் அரசியல் எதிரிகளை எவ்வாறு குறிவைக்கிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு,” என்று பெர்சே கூறியது.
நேற்று முன்தினம், கட்சியின் தேர்தலை ஒத்திவைத்த அம்னோவின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று ஆர்ஓஎஸ் கூறியது.
ஆர்ஓஎஸ் தலைமை இயக்குநர் ஜாஸ்ரி காசிம், அம்னோ உச்சமன்றப் பணிக்குழுவின் முடிவு செல்லுபடியாகாது, ஏனெனில் முடிவு எடுப்பதற்கு முன்பே, அம்னோ உச்சமன்ற செயற்குழுவின் பதவி காலம் முடிவடைந்தது என்றார்.
கட்சியின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது, ஆனால் தேர்தலை ஒத்திவைப்பதற்கான முடிவு ஜூலை 7-ஆம் தேதி எடுக்கப்பட்டது.
கட்சியின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான தேசியக் கூட்டணி (பிஎன்) சார்பான குழு மற்றும் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையிலான குழுவான, கட்சியில் சட்டமியற்றுபவர்களிடையே பிளவு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெர்சே நேற்று ஓர் அறிக்கையில், அரசியல் கட்சிகளின் மேற்பார்வை ஒரு சுயாதீன தேர்தல் ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.) கீழ் வைக்கப்பட வேண்டும் அல்லது ஒரு புதியத் தேர்தல் மேலாண்மை அமைப்பு, தேர்தல் அமலாக்க ஆணையம் (எஸ்.பி.பி.ஆர்.) நிறுவப்பட்டு, புதிய அரசியல் கட்சிகள் சட்டம் மற்றும் தேர்தல் சட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
“அரசியல் கட்சிகளின் பதிவைத் தேர்தல் ஆணையத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று முன்மொழிந்த தேர்தல் அமைப்பு மற்றும் சட்ட மேம்பாட்டு குழுவின் (ஈ.ஆர்.சி.) 11-வது முன்மொழிவுக்கு இணங்க இது உள்ளது,” என்று அது வலியுறுத்தியது.