ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பேரணியை ஏற்பாடு செய்யவோ அல்லது பங்கேற்கவோ பிடிவாதமாக இருக்கும் எந்தத் தரப்பினருக்கும் எதிராக, தனது துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.
தனது தரப்பினருக்கு, இந்தத் திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்தச் செயல் பொறுப்பற்றது என்றும் அக்ரில் விவரித்தார்.
தேசிய மீட்புத் திட்டத்தின் செந்தர இயங்குதல் செயல்பாட்டை மீறுவதோடு, கோவிட் -19 தொற்றின் தற்போதைய சூழ்நிலையில், சுகாதாரப் பாதுகாப்பைப் புறக்கணிப்பதால், இதுபோன்ற நடவடிக்கைகளின் திட்டமிடல் பொறுப்பற்றது.
“சட்டத்தையும் நடைமுறையில் உள்ள எஸ்.ஓ.பி.-களையும் மீறும் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்க வேண்டாம் என்று பிடிஆர்எம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
“பொது சுகாதாரத்தின் பாதுகாப்பிற்காக, எந்தவொரு பேரணியையும் ஏற்பாடு செய்வதில் அல்லது பங்கேற்பதில் பிடிவாதமாக இருக்கும் எந்தவொரு தரப்பினரையும் பிடிஆர்எம் பொறுத்துக் கொள்ளாது, இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
முன்னதாக நேற்று, #லாவான் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள், பிரதமர் முஹைதீன் யாசின் நாட்டை ஆளத் தவறியதாகக் கூறி, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மற்றொரு தெருப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று வலியுறுத்தினர்.
நிலைமை மாறாமல் இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் “பெரிய” போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31-ம் தேதி, கோலாலம்பூரில், பிரதமரைப் பதவி விலக வலியுறுத்தி எஸ்எஸ்ஆர் பேரணி நடத்தியது.
அதைத் தொடர்ந்து, போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களையும் பங்கேற்பாளர்களையும் போலீசார் விசாரித்தனர்.