பி.எஸ்.எம். : அவசியமற்றவற்றைத் தொடர்புகொள்வதில், தடமறிதலில் பிஎன் அரசாங்கம்

கருத்து | எந்தவொரு குழப்பமான ஆளும் கட்சியும், ஆட்சியில் தொடர்ந்து இருக்க, உயிர்வாழ்வதற்கான செய்முறை ஒன்றுதான் – வற்புறுத்தல் அல்லது அதிகாரத்தைக் காட்டுதல். வற்புறுத்தல் வேலை செய்யவில்லை என்றால், கருத்து வேறுபாட்டைச் சமாளிக்க ஒரே வழி அதிகாரம்தான்.

சீர்திருத்த காலத்தில் நாம் இதனைப் பார்த்தோம், அப்போதையப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது எப்படி இசா சட்டத்தையும் அரசு பொது நிறுவனங்களையும் தனது ஆட்சிக்கு எதிரானவர்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தினார் என்பதையும்; முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது ஆட்சியின் போது, தனக்கான எதிர்ப்பைக் கையாள்வதற்கு எப்படி தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தினார் என்பதையும் பார்த்தோம்.

இப்போது, தேசியக் கூட்டணி அரசாங்கம், அதிகளவிலான அடக்குமுறைகளை ஒவ்வொரு மணி நேரமும் கட்டவிழ்த்து விடுவதைக் காண முடிகிறது.

பொது பேரணிகளின் பங்கேற்பாளர்களையும் ஏற்பாட்டாளர்களையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 112-இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின் கீழ் விசாரிக்க வேண்டுமெனக் கூறி, 112 அறிக்கைகளைப் பதிவு செய்ய காவல்துறையினர் அழைப்பது வழக்கமாகி வருகிறது.

எனினும், பேரணிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் சுஹாகாம் மற்றும் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்களையும், 112 அறிக்கைகளைப் பதிவு செய்ய அழைப்பது அசாதாரணமானது. இது ஆளும் கட்சியின் அடக்குமுறை நிலை மேம்படுத்தப்பட்டதற்கான ஓர் அறிகுறியாகும்.

ஆர்ப்பாட்டத்தின் பங்கேற்பாளர்கள், தங்கள் 112 அறிக்கைகளில் கொடுத்த முகவரிகளில்தான் உண்மையில் வசிக்கிறார்களா என்பதைக் காவல்துறை சென்று சோதிப்பது வழக்கத்திற்கு மாறானது, இது காவல்துறையின் புதிய நடவடிக்கை என்று தெரிகிறது.

சமீபத்திய #லாவான் பேரணிக்குப் பிறகு, டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை, ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் அறிக்கைகளைப் பதிவு செய்தது. கேஎல் காவல்துறை பணிப்படை – ஐபிகே குற்றவியல் பிரிவிலிருந்து கூடுதல் அறிவுறுத்தல் வந்ததாகக் கூறப்படுகிறது, அதாவது பங்கேற்பாளர்களின் முகவரிகளைச் சரிபார்க்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கூறப்பட்டது என்று.

பங்கேற்பாளர்கள், அவர்கள் கொடுத்த முகவரிகளில்தான் தங்கியிருக்கிறார்களா என்பதை அறிய மூன்று முதல் நான்கு போலீசார் வீடு வீடாக அனுப்பப்பட்டனர்.

கோவிட்-19 தொற்றுக்கு நெருங்கியத் தொடர்புகளைத் தொடர்புகொள்வதில் நாம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டிருந்தாலும், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் தொடர்புத் தடமறிதலைச் செய்ய அரசாங்கத்திற்குப் போதுமான வசதி, வாய்ப்புகள் உள்ளன.

ஆர்.ஓ.எஸ்.-இன் அத்தியாவசிய வரையறை

இப்போது திடீரென, நாட்டில் தொற்றுநோய் உச்சத்தில் உள்ளபோது, ​​சங்கங்களின் பதிவாளருக்கு (ஆர்ஓஎஸ்) அம்னோவின் தேர்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூற்றுபடி, “அத்தியாவசியமற்ற சமூக நடவடிக்கைகள்” என்பதால் இது அனுமதிக்கப்படாது என்று கூறி, 2021 ஜூன் மாதத்தில், அதன் மெய்நிகர் மாநாட்டை ஒத்திவைக்க பிகேஆரிடம் சொன்ன அதே ஆர்ஓஎஸ், இப்போது வேறுமாதிரியாக…

தொற்றுநோய் காரணமாக, ஒரு மெய்நிகர் மாநாட்டை ஒத்திவைத்த ஆர்ஓஎஸ், இப்போது அம்னோ அதன் தேர்தலை ஒத்திவைத்ததற்கான முடிவைச் செல்லுபடியாகாது என்று கூறுகிறது, சற்று சிந்தித்துப் பாருங்கள். தொற்றுநோய்களின் போது, திடீரென அம்னோவின் தேர்தல் ஆர்ஓஎஸ்-க்கு ஏன் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

ஜூலை 19-ஆம் தேதி, கட்சி தேர்தலை ஒத்திவைப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அம்னோவிடம் கூறிய ஆர்ஓஎஸ், கட்சி தேர்தலை ஒத்திவைத்த அம்னோவின் முடிவு செல்லாது என்று நேற்று கூறியது.

இந்தத் திடீர் மாற்றங்களைக் கண்டுபிடிக்க நமக்கு ராக்கெட் விஞ்ஞானிகள் தேவையில்லை. மகாதீரின் அம்னோ பாரு எப்படி அனுமதிக்கப்பட்டது, மற்றும் அதன் செயல்பாட்டில், அவரது எதிர்ப்பாளர்கள் ஓரங்கட்டப்பட்டு, எவ்வாறு அம்னோ மலேசியாவை உருவாக்க முயன்றனர் என்பதை வரலாறு நமக்கு விளக்கும்

இதனால்தான், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்பட்டது. அடுத்த ஒரு மாதத்திற்கு, ஆர்ஓஎஸ் ஓய்வில்லாமல் இருக்கும்.

அடுத்த ஒரு மாதத்திற்கு, அரசாங்கமும் ஓய்வில்லாமல் இருக்கும். அரசாங்கத்திற்குத் தேவையான எண்ணிக்கையை உருவாக்க, எம்.பி.க்களைத் தொடர்புகொள்வதில் அரசாங்கமும், சமூக ஆர்வலர்களைத் தொடர்புகொள்வதில் காவல்துறையும் ஓய்வில்லாமல் இருப்பார்கள்.

மக்கள் கவலை கொள்ளும் ஒரே எண்ணிக்கை, கோவிட்-19 தொற்றின் தினசரி இறப்பு மற்றும் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை மட்டுமே.

இது போன்ற நேரங்களில்தான், அதிகாரத்திற்கானப் போராட்டத்தில் அத்தியாவசியமானவை மங்கலாகும்போது, மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் வலுவான சுயாதீன நிறுவனங்கள் நம்மிடம் உள்ளன என்ற நம்பிக்கை உருவாகிறது, அவை தங்கள் கடமைகளைச் செய்யும்.


எஸ் அருட்செல்வன், மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தேசியத் துணைத் தலைவர்