டிஏபி எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி, ‘டுரியான் RM30’ – குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கிறது

தேசியக் கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தால், அமைச்சர் பதவிகள் உட்பட, பல சலுகைகள் வழங்கப்படும் என்ற அணுகலை எதிர்கொண்டதாகக் கூறிய மூன்று டிஏபி எம்.பி.க்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சந்தித்ததாகக் கூறியது.

எம்ஏசிசி இன்று ஓர் அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தது.

“இதுவரை, எம்ஏசிசி மூன்று டிஏபி எம்.பி.க்களைச் சந்தித்து குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புலனம் வழி செய்தி அனுப்பிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரின் உண்மையான அடையாளத்தை எம்ஏசிசியால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை.

அக்குற்றச்சாட்டுகளை வெளிபடுத்திய 3 டிஏபி உறுப்பினர்கள், எம் குலசேகரன் (ஈப்போ பாராட்), கூ போய் தியோங் (கோத்த மலாக்கா) மற்றும் கெல்வின் யீ (கூச்சிங்) ஆகியோர் ஆவார்.

முன்னதாக, ஷம்சுல் அனுவார் நசாரா மற்றும் டாக்டர் நொரைய்னி அஹ்மத் ஆகியோர் இராஜினாமா செய்த பிறகு, இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக இருப்பது குறித்து, அறியப்படாத ஓர் எண் தன்னைத் தொடர்பு கொண்டதாகக் கூ கூறினார்.

கூவின் கூற்றுப்படி, தனிநபர் ‘டுரியான் RM30’ ரொக்கமாகவும் அமைச்சர் பதவியையும் வழங்கினார். “டுரியான் RM30” என்றால் என்ன என்று தெரியவில்லை என்றார்.

அதைத் தவிர, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நாசுதியோன் இஸ்மாயில் தனது கட்சி சார்ந்த ஐந்து எம்பிக்களான லியோ ஹ்சியாட் ஹுய் (உலு சிலாங்கூர்), அஸ்மான் இஸ்மாயில் (கோல கெடா), சான் மிங் காய் (அலோர் ஸ்டார்), முஹம்மது பக்தியார் வான் சிக் (பாலிக் புலாவ்) மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் (செத்தியவங்சா) ஆகியோரை  “வாங்க” முயற்சிகள் நடப்பதாக கூறினார்.

பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் பிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான அம்னோவின் முடிவுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டது.

முஹைதீன் இன்னும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாகவும், அடுத்த செப்டம்பர் அமர்வில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அதை நிரூபிக்க உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

எனினும், அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இது தொடர்பில், கூறப்படும் சலுகை குறித்து குலசேகரனின் தனிச் செயலாளரிடமிருந்து புகார் அறிக்கை கிடைத்ததாகப் பேராக் காவல்துறை தெரிவித்துள்ளது.

“கடந்த வெள்ளிக்கிழமை, இரவு 10.30 மணியளவில் இரண்டு அறியப்படாத தொலைபேசி எண்களில் இருந்து ஊழல் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அழைப்புகள் வந்ததால், புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக இரண்டு போலீஸ் அறிக்கைகள் கெடா மற்றும் பினாங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித் கூறினார்.

புகார் அறிக்கை தொடர் நடவடிக்கைக்காக, பேராக் எம்ஏசிசிக்கு அனுப்பப்பட்டதாக மியோர் கூறினார்.