‘பழிவாங்க மக்கள் பணத்தைப் பயன்படுத்தாதீர்’ – சனுசியிடம் பி.எஸ்.எம். வலியுறுத்து

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்கு பற்றி, சமீபத்தில் “மோசமாக கேலி” செய்த கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோரை அவமதித்ததாகக் கூறி, மூன்று நபர்களைத் தடுத்து வைத்ததற்காக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) காவல்துறையைக் கடுமையாக சாடியது.

அதன் துணைத் தலைவர், எஸ் அருட்செல்வன், சனுசியின் சிறப்பு அதிகாரி மூன்று பேருக்கு எதிராக அளித்த புகார் அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டது என்றார்.

“சனுசி பற்றி கருத்து தெரிவித்ததற்காகப், போலீசார் அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

தண்டனைச் சட்டம் பிரிவு 504, சிறு குற்றச் சட்டம் 1955 பிரிவு 14 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவதாகப் போலீசார் தெரிவித்தனர்.

“நமது பேச்சுச் சுதந்திரத்திற்கு, அரசியலமைப்பின் 10-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, சனுசி அவர்களின் விமர்சனங்களில் திருப்தி அடையவில்லை என்றால், அவர் சிவில் நீதிமன்றங்களைப் பயன்படுத்தி அவதூறு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று அருட்செல்வன் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

சனுசி தான் அவமதிக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்களைப் பழிவாங்குவதற்கு மக்களின் பணத்தைப் பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

“இது ஒரு சிவில் விவகாரம், குற்றவியல் வழக்கு அல்ல என்று காவல்துறையினர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியிடம் கூறியிருக்க வேண்டும்.

“தயவுசெய்து, இதுபோன்ற தேவையற்றப் பணிகளைச் செய்யச் சொல்லி, காவல்துறையினரின் பணிச் சுமையை அதிகரிப்பதை நிறுத்துங்கள். மேலும் இது போன்ற விஷயங்களுக்கு எங்கள் (மக்களின்) பணத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள்,” என்று அருட்செல்வன் கூறினார்.

நேற்று முன்தினம், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கோவிட் -19 நோயாளியின் சடலங்கள் குறித்து “மோசமாக நகைச்சுவை” செய்ததாகக் கூறப்பட்ட சனுசியை அவமதிக்கும் வீடியோ தொடர்பாகக் கைது செய்யப்பட்டார்.

கோல முடா மாவட்டக் காவல்துறைத் தலைவர், அட்ஸ்லி அபு ஷா, அம்முதியவரைக் கண்டுபிடித்து, அவரது வீட்டைப் போலிசார் சோதனை செய்ததை உறுதி செய்தார்.

அம்முதியவர் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என அட்ஸ்லி தெரிவித்தார்.

நேற்று, கோத்த ஸ்டார் போலீஸ் தலைவர், ஏசிபி அஹ்மத் சுக்ரி மாட் அகிர், 42 மற்றும் 52 வயதுடைய இருவர் அலோர் ஸ்டாரில் உள்ள அவர்களது வீடுகளில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஓர் அரசியல் தலைவரின் முகநூலில், கருத்துகளை எழுதி வெளியிட்டதை இருவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சனுசி முன்பு மற்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், பினாங்கில் உள்ள ஆட்டோசிட்டி ஜூருவில், ஒரு வாகன விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தில், ஒரு காரை ஓட்டி சோதனை செய்ததைக் கண்டுபிடித்ததற்காக அந்தப் பாஸ் தலைவருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்து கோவில்களை இடிக்கும் விவகாரத்தை விமர்சித்ததற்காக இந்தியத் தலைவர்களைத் தாக்கி, இனவெறி கருத்துக்களை வெளியிட்டதற்காக சனுசி விமர்சிக்கப்பட்டார்.

இந்தப் பிரச்சினையில் அவர்கள், “குடிபோதைக்கு… கள்ளுக்குப் பிரபலமானவர்கள்”-ஆக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.