முஹைதீனை நிராகரித்து 35 பிகேஆர் எம்.பி.க்கள் அகோங்கிற்குக் கடிதம்

பிரதமர் முஹைதீன் யாசினை நிராகரித்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தனது கட்சி கடிதம் அனுப்பியதைப் பிகேஆர் உறுதிப்படுத்தியது.

பிகேஆர் தொடர்புத்துறை இயக்குநர், ஃபாஹ்மி ஃபாட்சில் இந்தத் தகவலை உறுதி செய்தார்.

“உண்மை. அனைத்து பிகேஆர் எம்.பி.க்களும் மஹியட்டீன் எம்டி யாசினின் தலைமையை ஆதரிக்கவில்லை, நிராகரிக்கிறோம் என்று பிகேஆர் அகோங்கிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-ன் அடிப்படையில், அவர் தாமதிக்கக் கூடாது, ஏனெனில் அவர் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்,” என்று அவர் கூறினார்.

பெஜுவாங், டிஏபி, பிகேஆர், வாரிசான், சரவாக் பெர்சத்து கட்சி, மூடா, அமானா மற்றும் மஸ்லீ மாலிக் (சுயேட்சை) ஆகிய 105 எம்.பி.க்களும் முஹைதீனை நிராகரித்து கடிதங்கள் அனுப்பியதாக ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, மலேசியாகினி வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

பதிவுக்காக, முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்காக, கட்சியின் 13 மக்களவை உறுப்பினர்கள் கடிதங்களைச் சமர்ப்பித்ததாக அம்னோ முன்பு வெளிப்படுத்தியிருந்தது.

இந்த விஷயம், முறையே ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 3 தேதியிட்ட இரண்டு கடிதங்கள் மூலம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதன் வழி, மக்களவையில் முஹைதீனின் ஆதரவு இப்போது 100 உறுப்பினர்களாக குறைந்துள்ளது, இது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 11-க்கும் குறைவாக உள்ளது.