தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர் மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில், நேற்று இரவு ஆக்ஸிஜன் எரிவாயு சிலிண்டர் தீ விபத்தில், ஆண் நோயாளி ஒருவர் தீக் காயமடைந்தார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர், இரவு 7.42 மணிக்கு அழைப்பைப் பெற்ற பின்னர், சிலிம் ரீவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.
48 வயது நோயாளியின் கைகளில், ஒன்பது விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
“சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், 15×20 சதுர அடி அளவிலான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறை தீக்குள்ளானதைக் கண்டறிந்தது.
“இருப்பினும், தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.
மேலும், அச்செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீயணைப்பு படையினர் அடுத்தடுத்து முழுமையான மதிப்பீடு மற்றும் ஆய்வை மேற்கொண்டனர், சம்பவ இடத்தில் வேறு எந்த ஆபத்துகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியப் பின்னர், இரவு 8.55 மணியளவில் ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்தன.
பெர்னாமா