ஜொகூர் பாரு மாநகர முதல்வர், ஆடிப் அஸாரி டாவூட், ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவ மூன்று நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விண்ணப்பத்தை அனுமதித்த பிறகு, அந்த 60 வயது மூத்த அதிகாரி மீதான மறு உத்தரவை, மாஜிஸ்திரேட் முகமது ஜுல்ஹில்மி இப்ராஹிம் பிறப்பித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
தடுத்து வைப்பதற்கான விண்ணப்பம், எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 17 (a)-இன் கீழ், விசாரணை நடத்த எம்ஏசிசி சட்டத்திற்கு உதவுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது கையூட்டின் மதிப்புக்கு ஐந்து மடங்கு தண்டம் அல்லது RM10,000, எது உயர்ந்ததோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கைவிலங்கிடப்பட்ட நிலையில், எம்ஏசிசியின் தடுப்பறை சட்டையை அணிந்திருந்த ஆடிப், காலை 9 மணியளவில் எம்ஏசிசி அதிகாரிகளுடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தார்.
நேற்று, ஜொகூர் எம்ஏசிசி இயக்குநர், ஆஸ்மி அலியாஸ், ஆடிப் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
ஊடகச் செய்தி அறிக்கைகளின்படி, ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க, ஒப்பந்ததாரர்களிடமிருந்து கையூட்டு வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆடிப் ஜொகூர் எம்ஏசிசி அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
நவம்பர் 2017 முதல் நவம்பர் 2019 வரையில், இஸ்கண்டார் புத்ரி மாநகர மன்றத்தின் முதல்வர் பதவியில் இருந்தபோது இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பதவியில் இருக்கும் ஒரு மாநகர் மன்ற முதல்வர், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.