கோவிட் -19 தொற்றுக்குச் சாதகமான கர்ப்பிணிப் பெண்களின் இறப்புகள் மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்.) தெரிவித்துள்ளது.
அக்குழுவினரிடையே, குறைந்த தடுப்பூசி பதிவு விகிதங்களுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு உள்ளது.
“கர்ப்பிணிப் பெண்கள், கடுமையான கோவிட் -19 தொற்றைப் பெறுவதற்கான அதிக ஆபத்துள்ள குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம்.
“எம்.ஓ.எச். அனைத்து கர்ப்பிணிகளையும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படும் சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்க தடுப்பூசி எடுக்குமாறு அழைப்பு விடுக்கிறது.
“கோவிட் -19 தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய, கணவன்மார்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கான தடுப்பூசியை விரைவுபடுத்த, அருகில் உள்ள சுகாதார மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
ஆகஸ்ட் 9-ஆம் தேதி, கோவிட் -19 காரணமாக பிரபலப் பாடகி சித்தி சாரா ரைசுதீன் இறந்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த நேரத்தில், அவர் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தார், ஆகஸ்ட் 6-ம் தேதி அவருக்குச் சுவாசக் கருவி பொறுத்தப்பட்டது, அதே நாளில் அறுவை சிகிச்சை மூலம் தன் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிலவரப்படி, கோவிட் -19 தொற்று காரணமாக 70 கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ளனர்.
2020 முழுவதும் கர்ப்பிணிகள் சம்பந்தப்பட்ட கோவிட் -19 இறப்புகள் இல்லை, ஆனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை சராசரியாக இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
“இதில், ஜூன் 2021 முதல் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் இருவர் தடுப்பூசியின் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், மேலும் 15 நேர்வுகள் தடுப்பூசியைப் பெறவில்லை என்று தரவு காட்டுகிறது.
“கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், பதிவான இறப்புகளில் 47 விழுக்காடு கொமொர்பிடிட்டிகளைக் (பிற நோய்களையும்) கொண்டவர்கள்,” என்ற அவர், கர்ப்பிணிப் பெண்களுக்கு, 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்துதான் தடுப்பூசி வழங்கப்பட்டது என்று மேலும் கூறினார்.
மற்ற நோயாளிகளை விட, கர்ப்பிணி பெண்கள் உடனடியாகத் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்படுவதாகவும் நூர் ஹிஷாம் கூறினார்.
ஜூன் 2021 நிலவரப்படி, மலேசியாவில் கர்ப்பிணிப் பெண்களிடையே 3,396 நேர்மறை நேர்வுகள் இருந்தன – மலேசியாவில் உள்ள ஒட்டுமொத்த கர்ப்பிணிப் பெண்களில் இது கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு ஆகும்.
“அக்டோபர் 2020 முதல், நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மாதத்திற்குச் சராசரியாக 200 நோய்த்தொற்றுகள் மே 2021 (850 நேர்வுகள்) மற்றும் ஜூன் 2021 (899 நேர்வுகள்) ஆகியவற்றில் காணப்படுகிறது.”
ஐசியு-இல் கர்ப்பிணிப் பெண்களின் சேர்க்கையைப் பார்க்கும் பொழுது, ஆகஸ்ட் 7-ல், 5.3 விழுக்காடாக இருந்தது, ஜூலை 10-ல், 5 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது என்று கூறினார்.
“தீவிர நிலையில் இருக்கும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், தீவிரச் சிகிச்சை பெறும் கர்ப்பிணித் தாய்மார்களின் விகிதம் 20-ல் ஒன்று என்று விரிவான பகுப்பாய்வு காட்டுகிறது.
“இந்த விகிதம் பொது மக்களில், கர்ப்பிணிப் பெண்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ளது, அதாவது 220-இல் ஒன்று,” என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில், ஆகஸ்ட் 8 வரையில், 146,759 கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ளனர் – மலேசியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களிலும் கணக்கிடும்போது இது 40 விழுக்காடு மட்டுமே.
பதிவு செய்தவர்களில், 83,251 பேர் (57 விழுக்காடு) ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர், 20 விழுக்காட்டினர் இரண்டு மருந்தளவு பெற்றுள்ளனர்.
பதிவுக்காக, எம்.ஓ.எச். வழிகாட்டுதல்களின் படி, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பக் காலத்தின், 14 முதல் 33 வாரங்களுக்கு இடையில் முதல் மருந்தளவைப் பெற வேண்டும் என்று கூறுகிறது.
இருப்பினும், கர்ப்பத்தின் 33-வது வாரத்திற்குப் பிறகு, தடுப்பூசி போடுவது முற்றிலும் முரண்பாடானதல்ல, அந்தந்த தனிநபருக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்துகளை மதிப்பிடுவதன் மூலம் வழக்கு-அடிப்படையில் தடுப்பூசி போடலாம்.
தடுப்பூசி தவிர, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கானப் பிற நடவடிக்கைகளையும் நூர் ஹிஷாம் பரிந்துரைத்தார்.
செந்தர இயங்குதல் நடைமுறைகளைக் (எஸ்.ஓ.பி.) கடைப்பிடிப்பது போன்ற பொதுவான ஆலோசனைகளுக்கு மேலதிகமாக, கர்ப்பிணிப் பெண்கள் அறிகுறிகளை அனுபவிக்காவிட்டாலும், அவர்கள் நேர்மறையானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டால், கோவிட் -19 மதிப்பீட்டு மையத்திற்கு (சி.ஏ.சி.) செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சுகாதார வசதிகளில் அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றால், மருத்துவர்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.
“நிலைமை மோசமாகிவிட்டால், அவர்கள் நேராக கிளினிக் அல்லது சிஏசிக்குச் செல்ல வேண்டும், அல்லது 999 எண்ணுக்கு அழைக்கவும் அல்லது மருத்துவமனைக்கு நேராக செல்லவும்,” என்று அவர் மேலும் கூறினார்.