பி.எச்.-இன் பிரதமர் வேட்பாளராக ஒரே ஒரு பெயர் மட்டுமே – அன்வர் இப்ராஹிம்

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமை மன்றம், புதியப் பிரதமர் வேட்பாளராக ஒரு பெயரை மட்டும் குறிப்பிடுவது குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

“அது பி.எச்.-இன் நிலைப்பாடு, பி.எச்.-இலிருந்து ஒரு வேட்பாளர் பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்படும், இது குழப்பத்தைத் தவிர்க்கவே, ஏனென்றால் மற்றவர்களுடன் அப்பதவிக்காகப் பேச்சுவார்த்தைகள் இருப்பதாக வதந்திகள் பரவி உள்ளன,” என்று அவர் கூறினார்.

இன்று, போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் சேவை மையத்தில், கோழியும் உணவு கூடைகளும் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு அன்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக, பிஎச் தலைமை மன்றம், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் முஹைதீன் யாசினை நிராகரித்து, அன்வாரை ஆதரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அன்வர், பி.எச்.-இன் நிலைப்பாட்டை, அனைத்து தரப்பினரும் நிராகரித்தால், அது அர்த்தப்படாது என்று கூறினார்.

“இதுவரை, பிஎச் தலைமை மன்றம் இதைத்தான் (ஒரு வேட்பாளர் மட்டுமே) முடிவு செய்தது.

“இது எங்கள் நிலைப்பாடு, ஆனால் நாங்கள் அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது என்பது தவிர்க்க முடியாதது,” என்று அவர் கூறினார்.