நாட்டில் தொற்றுநோய் பரவிவந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தேசியக் கூட்டணி (பிஎன்) கைப்பற்றியது. இது புதியப் பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தியது.
ஆரம்பத்தில், எடுக்கப்பட்ட அணுகுமுறைகள் குறைந்த எண்ணிக்கையிலான நேர்வுகளுடன், நேர்மறையான முடிவுகளைக் காட்டியது. ஆனால், விரைவில் அது கைமீறி போனது.
ஜனவரி 25, 2020-ல், கோவிட் -19 தொற்றின் முதல் நேர்வு மலேசியாவில் கண்டறியப்பட்டதிலிருந்து, இந்த வைரஸ் மலேசியாவில் 12,000-க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.
இது 16 மாதகால முஹைதீன் யாசின் நிர்வாகத்திற்கு, “அபாயகரமான அடி” கொடுத்ததாகத் தெரிகிறது, அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் அளவிற்கு.
கடந்த வாரம், மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்த விஷயத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கோவிட் -19 தொற்றைக் கையாளும் திட்டத்தில், உயிர் காக்கும் முயற்சிகள் மற்றும் வருமான ஆதாரங்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய நிலையில், பலவீனமான பி.என். அரசாங்கம் அரசியலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது என்று அவர் சொன்னார்.
“தொற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தின் போது, பிஎன் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது, அப்போதிருந்தே ஆதரவு எண்ணிக்கையில் அது ஒரு வலுவான அரசாங்கம் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே, பெரும்பான்மை மெலிதாகவே இருந்தது.
“எனவே, ஒரு சமரசம் செய்யப்பட வேண்டும், அதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும் செயல்படாதவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
குறிப்பிட்ட கட்சிகளுக்குப் பல்வேறு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டது திறனின் அடிப்படையில் அல்ல, அவர்கள் கொடுத்த ஆதரவுக்காக.
இது பிரதமருக்கும் மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான சூழ்நிலை என்று அவர் மேலும் கூறினார்.
“பிரதமருக்கு, இது நிச்சயமாக ஒரு கனவாகும். நான் உறுதியாக நம்புகிறேன் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும், ஆனால் எந்த எதிர்வினையும் எதிர்மறையான முடிவுகளைத் தரும் என்பதால் எதிர்வினையாற்ற முடியவில்லை.
“மக்களைப் பொறுத்தவரை, நாம் ஒரு தொற்றுநோயால் சிக்கிவிட்டோம், அதே நேரத்தில், நம்மிடம் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாத அரசாங்கமே இருந்தது.
“இப்போது நடந்த எல்லாவற்றிற்கும் இதுதான் காரணம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நெருக்கடியின் போது, மக்களுக்கு நம்பிக்கை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைத்த அமைச்சர்களில் ஒருவர் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா ஆவார்.
கோவிட் -19 தொடர்பான கொள்கையை மாற்றியதற்காகவும், கோவிட் -19 தொற்றுக்கு எதிரானதாகக் கூறப்படும் அவசரகால நிலையை அறிவித்த முடிவிற்காகவும் அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது.
சபா பி.ஆர்.என்.-க்குப் பிறகு, தொடர்ந்து சரிவு
கோவிட் -19 பரவலின் ஆரம்ப கட்டங்களில், அறிவியல் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஆலோசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன – இது பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது என்று சுப்ரமணியம் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாடு உண்மையில் அர்த்தம் உள்ளதாக இருந்தது. பொதுமக்களுக்கு அதில் நம்பிக்கை இருந்தது. எனவே, அது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவியது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், உயிர், வருமானம் மற்றும் அரசியல் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைப் பராமரிப்பது பிஎன் அரசுக்குக் கடினமாக இருந்தது.
செப்டம்பர் 2020-ல், சபாவில் நடந்த மாநிலத் தேர்தல் அந்த சிரமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில், இது மற்றொரு ஆட்சி பறிப்பு முயற்சியாக அமைந்தது என்றார் சுப்ரமணியம்.
“உயிருக்கும் வருமான ஆதாரங்களுக்கும் தேர்தலுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஓர் அரசியல் முடிவு, அதில் பொது சுகாதாரக் கொள்கைகள் கடைபிடிக்கப்படவில்லை.
“தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே, சபாவில் நேர்வுகளில் அதிகரிப்பும் நிலைமை மோசமாவதைக் கண்டோம், இருந்தும் தேர்தலை நடத்த முடிவு செய்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜூலை 2020-இல், சிங்கப்பூர் தேர்தலுக்காக அந்நாடு கண்டிப்பான எஸ்.ஓ.பி.க்களை வகுத்தது, ஆனால் சபா தேர்தல் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டது என்றார் சுப்ரமணியம்.
“பெரிய பெரிய கூட்டங்கள் நடந்தன … மக்கள் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை, மக்கள் முகக்கவரி அணியாமல் நடமாடினர்.
“அது தவிர, தீபகற்பத்தில் இருந்து சபாவுக்குப் பயணங்கள் கட்டுப்பாடற்றதாக இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு தோல் மருத்துவரான சுப்ரமணியம், வழக்கமான தனிமைப்படுத்தல் தேவைகள் திறம்பட செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
“தேர்தலுக்குப் பிறகு, கோவிட் -19 தீபகற்பத்தில் பரவத் தொடங்கியது என்பது நமக்குத் தெரியும் … அதற்குப் பிறகு நிலைமை மேம்படவில்லை. இதனை மேலும் மோசமாக்க, ஒரு டெல்டா மாறுபாடு தோன்றியது,” என்று அவர் மேலும் கூறினார்.
தொழிற்சாலை மற்றும் பணியிடத் திரளைகள்
யாருடையப் பெயரையும் சொல்லாமல், அதிகாரத்தில் இருக்கும் சில தனிநபர்கள் பொருளாதார நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்குக் கட்டுப்படுத்தக்கூடாது என்று உணர்ந்து, சில துறைகளைத் திறக்க முடிவு செய்ததாக சுப்ரமணியம் கூறினார்.
பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்ச்சி முக்கியமானது என்றாலும், இந்த விஷயத்தில் முடிவுகள் அறிவியலால் வழிநடத்தப்பட வேண்டும் மற்றும் பொது சுகாதாரத்தின் அம்சங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“பல சந்தர்ப்பங்களில், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடத் திரளைகள் தோன்றுவதை நாம் பார்த்தோம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட திரளைகள் அதிகரித்தன – இது உண்மையில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
“வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சமூக அடிப்படையில் வாழ்வதே இதற்குக் காரணம். அவர்கள் குழுக்களாக நகர்கிறார்கள், வாழ்கிறார்கள், குழுக்களாகவே சாப்பிடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
அதைத் தவிர, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சிகளும் சீரற்றதாக இருந்தது, அது மக்களுக்குக் குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது என்று சுப்பிரமணியம் கூறினார்.
“சில குழுக்களுக்குப் பொருந்தும் சில விஷயங்கள் உள்ளன, ஆனால் அரசியல் தலைவர்களுக்கு அது பொருந்தவில்லை. அரசியல்வாதிகள் சட்டத்தை மீறினார்கள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சீரற்றவையாக இருந்தன.
“இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் என்னிடம் கேட்டால் (அதிகரித்து வரும் நேர்வுகள்), இதற்குக் காரணம்… அறிவியல், சுகாதாரம் மற்றும் அரசியல் கருத்துக்கள் சமன்நிலையில் இல்லை,” என்று அவர் கூறினார்.