முஹைதீன் : இடைக்காலப் பிரதமருக்குக் குறைந்த அதிகாரமே

யாங் டி-பெர்த்துவான் அகோங் ஒப்புதல் அளித்தபடி, தற்காலிகப் பிரதமராக தனது கடமைகளை நிறைவேற்ற உள்ளதாக முஹைதீன் யாசின் இன்று கூறினார்.

புத்ராஜெயாவில், பிரதமர் அலுவலகத்தில் மூத்த ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில், “இது ஒரு கெளரவமான வேலை, நான் (தற்காலிக) பிரதமராக எனது கடமைகளைச் செய்து, தொடர்ந்து நாட்டுக்கு உதவுவேன்,” என்று கூறினார்.

இன்று பிற்பகல், பிரதமர் பதவியில் இருந்து விலகும் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கிய முஹைதீன், அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அவருக்குப் பிறகான பிரதமர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று நம்புவதாகவும் கூறினார்.

மேலும் விரிவாக பேசிய முஹைதீன், மாமன்னர் அவரைத் தற்காலிகப் பிரதமராக தொடருமாறு கேட்டபோது, அதன் விதிமுறைகள் குறித்து ​​முஹைதீன் சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருனின் ஆலோசனையைப் பெற்றதாகச் சொன்னார்.

“புதிய பிரதமரை நியமிக்கும் வரை நான் மாமன்னருக்கு நிர்வாகச் செயல்பாடுகளைச் செய்து, ஆலோசனை வழங்க முடியும் என்று சட்டத்துறைத் தலைவர் கருத்துரைத்தார்.

அமைச்சரவை உறுப்பினர்களும் தற்காலிக அமைச்சரவையாகத் தக்க வைக்கப்படுவார்களா என்று கேட்டபோது, ​​தனக்குத் தெரிந்தவரை அவர் மட்டுமே பகடமைகளைச் செய்வார் என்று கூறினார்.

“இது ஒரு தனிமனிதர் நிகழ்ச்சி,” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

தற்காலிகப் பிரதமரின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து கேட்டபோது, முன்பு (பிரதமராக இருப்பது) போலல்லாமல், அதிகார வரம்புகள் இருப்பதாக முஹைதீன் கூறினார்.

“உதாரணமாக, RM1 பில்லியன் மதிப்புள்ள காசோலையில் என்னால் கையெழுத்திட முடியாது. நான் சட்டத்துறை தலைவரின் ஆலோசனையைக் கேட்டு, பின்பற்ற வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

-பெர்னாமா