நாளை அகோங் முன் ஆஜராகுமாறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

முஹைதீன் யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகி, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து, நாளை மாட்சிமை தங்கியப் பேரரசரை எதிர்கொள்ள இஸ்தானா நெகாரா முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுவரை, நான்கு அரசியல் கட்சிகள் – அம்னோ, பாஸ், டிஏபி மற்றும் பெஜுவாங் – நாளை இஸ்தானா நெகாராவுக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“நாளை பிற்பகல், இஸ்தானா நெகாராவில் ஆஜராகுமாறு அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடிக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தெரிகிறது,” என்று அம்னோ துணைத் தலைவர், முகமது ஹசான் மலேசியாகினியிடம் கூறினார்.

பாஸ் துணைத் தலைவர், துவான் இப்ராஹிம் துவான் மானும் இந்த விஷயத்தை புலனம் வழி உறுதிப்படுத்தியதோடு, கட்சியைப் பிரதிநிதித்து, தலைவர் அப்துல் ஹடி அவாங் நாளை அரண்மனைக்குச் செல்வார் என்றார்.

பெஜூவாங் அரண்மனையின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், தலைவர் முக்ரிஸ் மகாதீர் அகோங்கை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டிஏபியின் ஆதாரங்களும் இதை உறுதிப்படுத்தின.

கட்சி பிரதிநிதிகள், நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று டிஏபி மற்றும் பெஜுவாங் வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவை சபாநாயகர் அஸார் ஹருன் மற்றும் மேலவை சபாநாயகர் ராய்ஸ் யாத்திம் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்பார்கள் என்று மலேசியாகினிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைஸின் அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டது.