இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் கோரத்திற்குப் பலியாகும் பகாங் மாநில மக்களின் சவ அடக்கச் செலவுகளை மாநில அரசாங்கம் ஏற்றுக்குக் கொள்ளும் என இவ்வாரம் வெளியான தகவல் நமக்குச் சற்று ஏமாற்றத்தையே அளிக்கிறது.
மரணமடைவோரின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சுமைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் இம்முடிவை எடுத்ததாக மந்திரி பெசார் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பகாங் மாநில இஸ்லாமிய இலாகா இந்த விவகாரத்தைக் கையாளும் என்பதால் முஸ்லிம் அல்லாதார் இந்த உதவித் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளதாகவே தெரிகிறது.
கோறனி நச்சிலின் தொற்றினால் மரணமடைவோரை அடக்கம் செய்வது தொடர்பான அனைத்து வேலைகளையும் கவனிப்பதற்குத் தன்னார்வலர் இயக்கங்களின் சேவைகளை அரசாங்க மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றன.
அச்சேவைகளுக்கு ஆகும் மொத்தச் செலவுகளையும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இனிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாகச் சம்பந்தப்பட்ட அந்த இயக்கங்கள் மாவட்ட இஸ்லாமிய அலுவலகத்தின் கீழ் உள்ள பள்ளிவாசல்களின் வழி மாநில இஸ்லாமிய இலாகாவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஆக மாவட்ட இஸ்லாமிய இலாகாக்களும் பள்ளிவாசல்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் முஸ்லிம் அல்லாதாருக்கும் இந்த உதவித்திட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்றுதான் பொருள்படுவதாக உள்ளது.
இதற்கெனச் சிறப்பு நிதித் திட்டம் ஒன்றைத் தொடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் உள்ள எல்லாப் பள்ளிவாசல்களும் இதற்கு உதவ வேண்டும் என்றும் மந்திரி புசார் அலுவலகத்தின் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மாநில அரசாங்கத்தின் கீழ் இதுவெல்லாம் நடைபெறுவதால் முஸ்லிம் அல்லாதார், குறிப்பாக இந்தியர்களின் நிலை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.
அண்மைய மாதங்களாக நம் சமூகத்தைச் சேர்ந்த நிறைய பேர் வேலையிழந்து வருமானம் இழந்து அவதிப்படுவது மட்டுமின்றி தங்களுடைய அன்புக்குரியவர்களையும் நோய்த் தொற்றுக்குப் பலி கொடுத்துப் பரிதவிக்கின்றனர்.
எனினும் இதுபோன்ற இக்கட்டான சமயங்களில் கூட எல்லா இனத்தையும் சமமாக நடத்த வேண்டும் என இவர்கள் சிந்தனையில் ஏன் வெளிச்சம் விழவில்லை என்று நமக்குக் குழப்பமாகவே உள்ளது.
இவ்விவகாரத்தில் கூட நம் சமுதாயத்திற்கு எதிராகப் பாராமுகமா எனும் வருத்தம் நம்முள் எழத்தான் செய்கிறது.
மாநில அரசாங்கத்தின் இத்தகைய போக்கிற்கு எதிராக நம் சமூகம் சார்ந்த இயக்கங்களும் அரசியல் அமைப்புகளும் எம்மாதிரியான நிலைப் பாட்டைக் கொண்டுள்ளன என்று தெரியவில்லை.
தட்டிக் கேட்காவிட்டாலும் சுட்டிக் காட்ட வேண்டியது தங்களுடைய கடமை என்பதை அவ்வியக்கங்கள் உணரவேண்டும்.