நாளை மாலை 4 மணிக்குள், பிரதமர் வேட்பாளரைப் பரிந்துரைக்க எம்.பி.க்களுக்கு அறிவுறுத்து

நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கப்படுவதற்கு விருப்பமான வேட்பாளரைப் பரிந்துரைக்குமாறு, மக்களவையின் அனைத்து உறுப்பினர்களையும் இஸ்தானா நெகாரா அறிவுறுத்தியுள்ளது.

எம்.பி.க்கள் எழுத்துப்பூர்வமாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்க, நாளை மாலை நான்கு மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் உண்மை என்று சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பேரரசரின் உத்தரவின் பேரில், இன்று காலை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை சபாநாயகர், அஸார் அஸீஸான் ஹருன் எழுதிய கடிதம் மூலம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

“மத்திய அரசமைப்புச் சட்டம் 43 (2) (a)-இன் கீழ், மாமன்னரின் கருத்துப்படி, மக்களவையின் ஓர் உறுப்பினரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்.

“யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், நாட்டின் ஒன்பதாவது பிரதமரை நியமிக்க, நம்பிக்கைகுரிய மக்களவை உறுப்பினர் ஒருவரைத் தெளிவாக குறிப்பிட்டு, ஒரு பிரகடனக் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென, நான் எம்.பி.க்களுக்கு இதன்மூலம் அறிவிப்பு கொடுக்கிறேன்,” என்று அஸார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இஸ்தானா நெகாரா, தேசிய மறுவாழ்வுத் திட்டத்தின் 1-ஆம் கட்டத்தில் இருப்பதால், கடிதம், நேரடியாகக் கையளிக்கப்பட அனுமதி இல்லை,” என்று அவர் கூறினார்.

தாமதமாகப் பெறப்படும் எந்தவொரு கடிதமும், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதையும் அஸார் தெளிவுபடுத்தினார்.

“இந்த விவகாரத்தில், மாமன்னர் ஒரு முடிவை எடுக்கும் வரையில், அறிவிப்பு கடிதத்தை இரகசியமாக வைத்திருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று அவர், மலேசியாகினி பார்த்த அறிவிப்பு கடிதத்தில் கூறியிருந்தார்.