இடைக்கால பிரதமராக முஹைதீனின் பங்கு என்ன – வல்லுநர்களின் கருத்து

இடைக்கால பிரதமராக முஹைதீன் யாசின் பங்கு, நாட்டின் நிர்வாகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரையில், வழக்கம் போல் அப்பணியைத் தொடரலாம் என்று அரசியலமைப்பு மற்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலமைப்பு வல்லுனரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் கைரில் அஸ்மின் மொக்தார் கூறுகையில், தற்காலிக பிரதமராக முஹைதீனால் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது என்றும், முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாட்டின் நிர்வாகம் செயல்படும் என்றும் கூறினார்.

“தற்காலிகப் பிரதமர் எந்த முடிவையும் எடுப்பதில் ஈடுபட முடியாது, ஏற்கனவே உள்ள கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே செயல்பட முடியும். தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் அல்லது அமைச்சரவை இல்லை என்றாலும், அரசாங்கத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமாகத் தொடர்கிறது,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின், சட்டம் மற்றும் அரசியலமைப்பு விரிவுரையாளரான கைரில் அஸ்மின், தற்போதைய சூழ்நிலை, கடந்த ஆண்டு ஏழாவது பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமது இராஜினாமா செய்ததைப் போன்றது என்று கூறினார். பிரதமர் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிடையேப் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

கூட்டாட்சி அரசியலமைப்பில் ‘இடைக்கால பிரதமர்’ அல்லது ‘இடைக்கால அரசு’ தொடர்பான எந்தக் குறிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

இயல்பான சூழ்நிலையின்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோதுதான் ‘இடைக்கால அரசு’ உருவாகும் என்று கைரில் அஸ்மின் கூறினார், இது தானாகவே பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழக்கச் செய்யும்.

கைரில் அஸ்மினுக்கு இணையான, மற்றொரு அரசியலமைப்பு நிபுணர், பேராசிரியர் டாக்டர் ஷாம்ரஹாயு அப்துல் அசிஸ், முஹைதீனின் நியமனம், ஒரு புதியப் பிரதமர் நியமிக்கப்படும் வரை, அந்தப் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.

“இஸ்தானா நெகாராவின் ஊடக அறிக்கையில், ‘பராமரிப்பாளர்’ என்ற வார்த்தையைப் பார்க்கும்போது, ஒரு புதியப் பிரதமர் நியமிக்கப்படும் வரை காத்திருக்கும் வேளையில், ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்ட சூழ்நிலையைக் குறிக்கிறது. அதாவது, புதியப் பிரதமர் நியமிக்கப்படும் வரை மட்டுமே அவரது கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் பெர்னாமா தொலைக்காட்சியின் ஒரு பேட்டியில் கூறினார்.

மலாய் ஆட்சியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருக்கும் ஷாம்ரஹாயு, ‘பராமரிப்பாளர்’ என்ற சூழல் பிரதமருக்கு முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரம் இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

முன்னதாக, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, புதியப் பிரதமரை நியமிக்கும் வரை தற்காலிகப் பிரதமராக அல்லது பராமரிப்பாளராக முஹைதீனை நியமிக்க ஒப்புக்கொண்டார்.

முஹைதீனின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட பின்னர், முழு அமைச்சரவையும் பதவி விலகிய நிலையில், இன்று முதல் இடைக்காலப் பிரதமர் நியமனம் அமலுக்கு வந்தது.

வழக்கறிஞர் முகமது ஹனிஃப் கத்ரி அப்துல்லா, ஒரு தற்காலிகப் பிரதமர் என்ற கருத்து அரசியலமைப்பில் இல்லை, ஆனால் இது தவறு என்று அர்த்தமல்ல.

“முஹைதீன் கொள்கைகள் குறித்து முடிவுகளை எடுக்க முடியாது, மாறாக அகோங் ஒரு புதிய பிரதமரை நியமிக்கும் வரை அவர் அமைச்சின் செயல்பாடுகளை மட்டுமே கண்காணிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.