நிக் நஸ்மி : முஹைதீனின் அனைத்து ஜிஎல்சி அரசியல் நியமனங்களும் பதவி விலக வேண்டும்

செத்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினர், நிக் நஸ்மி நிக் அஹ்மத், முஹைதீன் யாசினால் நியமிக்கப்பட்ட அனைத்து ஜிஎல்சி அரசியல் நியமனங்களும் தங்கள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

முஹைதீன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த அழைப்பு வந்தது.

“முஹைதீனின் இராஜினாமாவுடன், ஜிஎல்சி மற்றும் ஜிஎல்ஐசியை வழிநடத்தும் அரசியல் நியமனங்களும் இராஜினாமா செய்ய வேண்டும்.

“இது சரியான மற்றும் கண்ணியமான ஒரு விஷயமாகும்.

“பிரதமரின் இராஜினாமாவுக்கு அடுத்து, அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை,” என்று நிக் நஸ்மி இன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.

அந்நிறுவனங்களின் பெரும்பகுதி, தொழில் ரீதியாக இயங்குவதால், அவர்களின் இராஜினாமா அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

“உருவாகப்போகும் புதிய அரசாங்கம், அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல், இந்தப் பதவிகளை நிரப்ப, தொழில்முறை மற்றும் உண்மையிலேயே தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முஹைதீன் கடந்த ஆண்டு பொறுப்பேற்ற முதல் இரண்டு மாதங்களில், ஜிஎல்சி, அரசு நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரப் பதவிகளுக்குப் பல தேசியக் கூட்டணி எம்.பி.க்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

இந்தப் பதவிகளில் அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்பு நிரப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஹைதீனுக்கான ஆதரவைத் தங்கள் கட்சி திரும்பப் பெற்றதால், அம்னோ துணைத் தலைவர் கலீட் நோர்டின் போன்ற சில அரசியல் நியமனக்காரர்கள், சமீபத்தில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். ஆனால், அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலானதே.