அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று இரவு விளக்கக் கூட்டம் நடத்துகின்றனர்

இன்று பிற்பகல், யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் தங்கள் தலைவர்கள் ஆஜரான பிறகு, தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 8.30-க்கு, அம்னோவின் 38 எம்.பி.க்களும், கோலாலம்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்திப்பார்கள் என்று அம்னோ ஆதாரம் ஒன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.

இதற்கிடையில், டிஏபி வட்டாரங்கள், கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், இன்று இரவு அனைத்து எம்.பி.க்களுடனும் இயங்கலையில் ஒடு விளக்கத்தை வழங்குவார் என்று கூறின.

“நாங்கள் இரவு 8.30-க்கு, இயங்கலையில் சந்திப்பை நடத்துவோம்,” என்று டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறுஞ்செய்தி மூலம் கூறினார்.

அமானா தரப்பில், அவர்களின் தலைவர் முகமது சாபு, மற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிப்பார் என்று கட்சியின் துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூறினார்.

“நாங்கள் இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளோம்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்ட அந்தப் பூலாய் எம்.பி. சொன்னார்.

இந்தச் செய்தி தயாராகும்போது, ​​பிகேஆர் இன்னும் கூட்டத்தை நடத்த முடிவு செய்யவில்லை என்று அதன் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

முன்னதாக, அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நேற்று முஹைதீன் யாசின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இஸ்தானா நெகாராவில் அரசியல் கட்சித் தலைவர்களை இன்று பிற்பகலில் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

அகோங் மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகு, பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம், மாட்சிமை தங்கிய மாமன்னர், அனைத்து அரசியல்வாதிகளையும் கோவிட் -19 தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து, “புதிய அரசியலை” உருவாக்கச் சொன்னதாகக் கூறினார்.

அரண்மனைக்கு வந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், “பழைய அரசியலை” நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் அன்வர் கூறினார்.