இடைக்காலப் பிரதமர் முஹைதீன் யாசின், இன்று காலை நாட்டிற்கு “நல்ல செய்தியை” கொண்டு வருவார் என்று பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர், வான் சைபுல் வான் ஜான் கூறினார்.
நேற்றிரவு, உத்துசான் மலேசியாவிடம் பேசிய வான் சைபுல், அவர் என்ன சொல்ல உள்ளார் என்பது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
“ஆம், ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஆனால் நான் குறிப்பிடுவது பொருத்தமானதல்ல. டான் ஸ்ரீ (முஹைதீன்) அதை அறிவிக்கட்டும். நாளை காலை அறிவிக்கலாம்.
“இந்த விஷயம் தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது எழுத்துப்பூர்வமான அறிக்கை மூலம் அறிவிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. முஹைதீனின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாம் காத்திருப்போம்,” என்று அவர் கூறினார்.
இந்தச் செய்தி தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் மறுசீரமைப்புடன் தொடர்புடையது என்பதையும் அந்த மேலவை உறுப்பினர் மறுக்கவில்லை; நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது, பிஎன் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு இன்னும் முடிவடையவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
“உண்மை என்னவென்றால், நாம் அனைவரும் பிஎன் அரசாங்கத்தைப் பராமரிக்க வேலை செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
நேற்று இரவு, அம்னோ உச்ச மன்றம் ஒருமனதாக இஸ்மாயில் சப்ரி யாகோப்பைக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைக்க முடிவு செய்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.
அவருக்கு 42 அம்னோ மற்றும் பிஎன் எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால், 115 எம்.பி.க்களின் ஆதரவோடு இஸ்மாயில் சப்ரி அடுத்த பிரதமராக இருப்பார்.
முஹைதீன் தனது பெரும்பான்மையை இழந்து திங்களன்று பதவி விலகினார்.
முஹைதீன் தனது பதவி விலகல் உரையின் போது, தான் ஊழல்வாதிகளுடன் இணைந்து வேலை செய்ய மாட்டேன் என்றார்.
ஊழல் வழக்குகளில் ஈடுபட்டுள்ள அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உட்பட பல அம்னோ தலைவர்களை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். 15 அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதால், முஹிதீன் இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது.
இருப்பினும், கூட்டணியைப் பராமரிக்க பிஎன் தலைவர்களுக்கிடையேயான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.