தே.மு. பிரதமர் வேட்பாளரால் தே.கூ. அமைச்சரவை கட்டமைப்பைப் பராமரிக்க முடியாது – அஷ்ராஃப்

தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கத்தின் அமைச்சரவை கட்டமைப்பைப் பராமரிக்க எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி தேசிய முன்னனி (தே.மு.) பிரதமர் வேட்பாளருக்கு நினைவூட்டியுள்ளார்.

அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைச் சமாளித்து வரும் இக்கால கட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஓர் அமைச்சரவையை உருவாக்க வேண்டுமென்ற மாட்சிமை தங்கியப் பேரரசரின் உத்தரவை வேட்பாளர் கடைபிடிக்க வேண்டும் என்று அஷ்ராஃப் கூறினார்.

“நேற்றிரவு நடந்த உச்சமன்றக் கூட்டத்தில், தே.மு. / அம்னோவிலிருந்து யார் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும், முந்தைய தே.கூ. அரசாங்கத்தின் அமைச்சரவை கட்டமைப்பைப் பராமரிக்க எந்தவொரு உடன்படிக்கையிலும் தன்னைப் பிணைக்க முடியாது என்பதை நான் வலியுறுத்தினேன்,” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

“மாமன்னர் பிரதமரின் பெயரைச் சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்காக, நாடாளுமன்றத்தில் ஒரு ‘நம்பிக்கை வாக்கு’ அல்லது ‘Vote of Confidence’ நடத்த உத்தரவிட்டதற்கு, நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமானக் காரணம் இருக்கும்,” என்று அஷ்ராஃப் மேலும் சொன்னார்.

முஹைதீனுக்குப் பதிலாக இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்கு அம்னோ ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறப்படுகிறது.

அம்னோ வட்டாரங்களின்படி, நேற்று இரவு கோலாலம்பூரில் நடந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சர்ச்சைக்குரிய இடைக்காலப் பிரதமர் தலைமையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க அஷ்ராஃப் முன்மொழிந்தார்.

அதற்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் குறிப்பிட்ட நபர்களை அவர் பெயரிடவில்லை என்றாலும், எந்தத் தற்காலிகப் பிரதமருக்கும் நாட்டின் மீட்பு தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆணை இருக்க வேண்டும் என்பதை அவர் முன்னிலைப்படுத்தினார்.

அனைத்து 42 அம்னோ மற்றும் தே.மு. எம்.பி.க்களின் ஆதரவுடன், கடைசி நிமிடத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், இஸ்மாயில் சப்ரி 115 எம்.பி.க்களுடன் அடுத்த பிரதமராக இருப்பார்.

முஹைதீன் தனது பெரும்பான்மையை இழந்து, திங்களன்று இராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, அக்காலியிடத்தை நிரப்ப, இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக, அனைத்து எம்.பி.க்களும் தங்கள் பிரதமர் தேர்வைச் சமர்ப்பிக்கும்படி மாமன்னர் உத்தரவிட்டார்.