எதிர்க்கட்சிகளின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அன்வருக்கு இப்போது உள்ள ஒரே பணி, மக்களவையில் பெரும்பான்மை பெற குறைந்தது ஆறு எம்.பி.க்களைப் பெறுவதுதான்.
88 பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்களைத் தவிர, அன்வருக்கு இப்போது வாரிசான், பெஜுவாங், சரவாக் பெர்சத்து கட்சி மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.
முன்னதாக, வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால், தகுதியான ஆதரவைப் பெறத் தவறியதை அடுத்து, அவரது கட்சி அன்வாருக்கு ஆதரவளிக்கும் என்பதை உறுதி செய்தார்.
அன்வாருக்கு ஆதரவாக எஸ்டியில் கையெழுத்திட்டதை வாரிசான் தலைமை வீரா முகமது அஸிஸ் ஜம்மான் உறுதிப்படுத்தினார்.
“பந்து இப்போது அன்வாரின் கைகளில் உள்ளது,” என்றார் அஸிஸ்.
அன்வார் தற்போது முன்னணியில் இருப்பதாக நம்பப்படும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன் போட்டியிடுவார்.
அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் (தே.மு.) ஆதரவைத் தவிர, பாஸ் மற்றும் பெர்சத்து ஆகியோரின் ஆதரவையும் இஸ்மாயில் சப்ரி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜிபிஎஸ் -ஐச் சேர்ந்த எம்.பி. ஒருவர், இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்க கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, இது அம்னோ துணைத் தலைவருக்கு அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவை அளிக்கும்.
இருப்பினும், ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜோஹரி ஓபேங், ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கை கேள்விக்குறியை எழுப்பியுள்ளது, அவர்கள் இந்த விஷயத்தை “யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஞானத்திற்கு” விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.
இது பிரதமர் வேட்பாளர் தேர்வில், ஜிபிஎஸ் நடுநிலை வகிப்பதாக சிலரால் கூறப்படுகிறது.
பின்னர், அபாங் ஜோஹாரியும் பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாடிலா யூசோஃப்-உம் ஜிபிஎஸ் எஸ்டியை அரண்மனையில் ஒப்படைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அக்கூட்டணி யாரை ஆதரித்தது என்பதை வெளிப்படுத்த, அந்த இரண்டு ஜிபிஎஸ் தலைவர்களும் மறுத்துவிட்டனர்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக, தங்களுக்கு விருப்பமான பிரதமர் வேட்பாளரைத் தெரிவிக்க வேண்டுமென இஸ்தானா நெகாரா நேற்று அறிவுறுத்தியது.