இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் பெயர் பிரதமர் வேட்பாளராக ஒப்புக்கொள்ளப்படுவதற்கு முன்பு, அந்த அம்னோ துணைத் தலைவரின் பெயர் முதலில் மூன்றாவது இடத்தில் இருந்தது என்று அகமது மஸ்லான் கூறினார்.
அம்னோ தலைமைச் செயலாளரின் கூற்றுப்படி, நேற்றிரவு கட்சி கருத்தில் எடுத்துகொண்ட முக்கியப் பெயர் அவர்களின் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அவரைத் தொடர்ந்து அவரது துணை முகமட் ஹசான்.
இருப்பினும், அஹ்மத் ஜாஹித் விலகிய பிறகு, அம்னோ அரசியல் பணி பிரிவு மற்றும் கட்சியின் உச்சமன்றச் செயற்குழு (எம்.கே.டி.) கூட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“அவர் தனது பெயர் பரிந்துரைக்கப்பட விரும்பவில்லை.
“இரண்டாவது வந்த பெயர் முகமட், ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே என்பதால், அப்பதவிக்குப் பொறுந்தவில்லை. எனவே, நாங்கள் இஸ்மாயில் சப்ரியைத் தேர்ந்தெடுத்தோம்,” என்று அவர் கூறியதாக தி வைப்ஸ் செய்திதளம் தெரிவித்துள்ளது.
பதிவுக்காக, ஆகஸ்ட் 16-ல், பெர்சத்து கட்சி தலைவர் முஹைதீன் யாசின் பதவி விலகியதைத் தொடர்ந்து, இஸ்மாயில் சப்ரி அக்காலியிடத்தை நிரப்ப ஆதரவு திரட்ட முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அந்தப் பெரா எம்.பி. அஹ்மத் சாஹித்துடன் ஒத்துப்போகவில்லை, அவருடன் சில அம்னோ எம்.பி.க்களும் முஹைதீன் மற்றும் தேசியக் கூட்டணியை ஆதரித்ததோடு, அமைச்சர் பதவியையும் வகித்து வந்தனர்.
அம்னோ உச்சமன்றம், அம்னோ எம்.பி.க்கள் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்று உத்தரவிட்ட போதிலும், இஸ்மாயில் சப்ரியும் இன்னும் ஆறு அமைச்சர்களும் அதனைப் பின்பற்ற மறுத்தனர்.
முஹைதீன் தனது அமைச்சரவையில் நியமித்த ஒன்பது அம்னோ எம்.பி.க்களில், இருவர் மட்டுமே – ஷம்சுல் அனுவார் நசாரா (லெங்கோங்) மற்றும் நொரைய்னி அஹ்மத் (பாரிட் சுலோங்) – இராஜினாமா செய்தனர்.
அஹ்மத் மஸ்லான், ஜாஹித்தின் பக்கம் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அஹ்மத் ஜாஹித்துக்கு ஆதரவாக இருந்த குறைந்தபட்சம் 11 எம்.பி.க்கள், இஸ்மாயில் சப்ரிக்குத் தங்கள் ஆதரவை மாற்றியபோது நிலைமை மாறியது என்பது புரிகிறது.
அதே நேரத்தில், இஸ்மாயில் சப்ரியை ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளராக அஹ்மத் கருதுகிறார்.
“அவர் அனுபவம் வாய்ந்தவர், முன்னாள் மூத்த அமைச்சர் மற்றும் முன்னாள் துணைப் பிரதமர். இஸ்மாயில் சப்ரி மிகவும் தகுதியானவர்,” என்று அவர் கூறினார்.