எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்க ஒரு என்ஜிஓ, “Jom Pantau!” (வாருங்கள் கண்காணிப்போம்) என்ற பெயரில் ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் கூட்டணியான பெர்சே 2.0-இன் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அது தன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும்.
“கண்காணிப்பின் முடிவுகளைத் தொகுத்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு வழங்குவோம். மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் அவை கொண்டு செல்லப்படும்”, என்று கோமாஸ் எனப்படும் சமூக தொடர்புமையத்தின் குடியுரிமை, வாக்காளர் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் பிரகாஷ் கூறினார்.
சிலாங்கூரில் தளம்கொண்ட அந்த என்ஜிஓ (அரசுசாரா அமைப்பு), 1990-களில் இருந்தே தேர்தல் கண்காணிப்புப் பணிகளிலும், தேர்தல்கள் பற்றிய ஆவணங்களைத் தயார்படுத்தும் பணியிலும் வாக்காளர்களுக்குத் தேர்தல் பற்றிய கல்வி புகட்டுவதிலும் ஈடுபட்டு வருகிறது.
“13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் கோமாஸுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்ட சமூக ஆர்வலர்கள் தாராளமாக முன்வரலாம்”, என்று அழைக்கிறார் அருள்.