பி.எம். & தி.பி.எம்.-ஆக பிரதமர் வேட்பாளர்கள் இஸ்மாயில் மற்றும் அன்வர் – கிட் சியாங் முன்மொழிந்தார்

மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் தேசியக் கூட்டணி (தே.கூ.) ஆகிய இரண்டு கூட்டணிகளைச் சேர்ந்த இரண்டு பிரதமர் வேட்பாளர்களையும், பிரதமர் மற்றும் துணைப் பிரதமராக, ஒரு ‘கலவை அமைச்சரவை’ அமைக்க பரிந்துரைத்தார்.

அந்த இஸ்கண்டார் புத்ரி எம்பி எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், தற்போது காலியாக உள்ள பிரதமர் பதவிக்கு இரண்டு முக்கிய வேட்பாளர்களாக அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பும் பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமும் உள்ளனர்.

இஸ்மாயில் இப்போது 114 எம்.பி.க்களின் ஆதரவுடனும், அன்வார் 105 எம்.பி.க்கள் ஆதரவுடனும் முன்னிலை வகிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

யாங் டி-பெர்த்துவான் அகோங் இன்று இஸ்மாயிலுக்குக் கிடைத்த ஆதரவை உறுதிப்படுத்தும் பணியில் உள்ளார்.

“பிரதமர் பதவிக்கு இரண்டு பெயர்கள் மட்டுமே இருந்தால், 18 மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜி.இ.15-க்கு முன், கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றிபெற, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போர் அமைச்சரவையை உருவாக்க, ஒருவரைப் பிரதமராகவும் மற்றொருவரைத் துணைப் பிரதமராகவும் நியமிக்கலாம்.

“கோவிட் -19 தொற்றுநோயால் 20 மாதங்களாக வீழ்ந்துகிடக்கும் நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்காகவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், இலக்குகளை அடைய, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், புதிய கொள்கைகள் மற்றும் உத்திகளைக் கொண்டுவருவதற்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு இந்த அமைச்சரவை அவசியம்,’ என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இதற்கிடையில், தெளிவானப் பெரும்பான்மையை எட்டவில்லை என்றால், இதேபோன்ற ஒரு முன்மொழிவைப் பெர்சத்து ராயிஸ் ஹுசினும் செய்தார்.

தெளிவான பெரும்பான்மை இல்லாததால், மாமன்னர் ஒரு வருட காலத்திற்குத் தொற்றுநோய் மேலாண்மை மற்றும் பொருளாதார மீட்பில் கவனம் செலுத்த ஓர் ஒற்றுமை அரசாங்கத்திற்கு (நிறுவப்பட்டது) உத்தரவிட முடியும்.

“அவர் அதிக எண்ணிக்கையிலான (ஆதரவு) கூட்டணியில் இருந்து ஒரு பிரதமரை நியமிக்க முடியும், மற்றவரைத் (கூட்டணி வேட்பாளர்) துணைப் பிரதமராக நியமிக்க முடியும்,” என்று அவர் கீச்சகம் மூலம் கூறியுள்ளார்.

பெர்சத்து உச்ச தலைமைத்துவ மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான அவர், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் இல்லாத, ஒரு சிறிய ஒற்றுமை அமைச்சரவையாக அது இருக்க வேண்டும் என்றார்.