நேரடி செய்தி | இன்று, மாட்சிமை தங்கிய மாமன்னர், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கத்தின் பகுதியாக இருந்த அல்லது ஆதரவாக இருந்த 114 எம்.பி.க்களை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வில், அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு அவர்களின் ஆதரவை அகோங் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 3.30 : அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிற்கு 114 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக பொந்தியான் எம்.பி. மீண்டும் வலியுறுத்தினார்.
கோவிட் -19 தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகுப் புதிய அரசாங்கத்திற்கு வாக்களிக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அஹ்மத் உறுதியளித்தார்.
அம்னோ செயலாளருமான அவர், புதிய அரசாங்கம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தும் என்றார்.
பிற்பகல் 2.50 : இடைக்காலப் பிரதமர் முஹைதீன் யாசின் நுழைவாசல் 1 வழியாக அரண்மனைக்குள் நுழைந்தார்.
பிற்பகல் 2.40 : 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாஸ் குழு இஸ்தானா நெகாராவுக்கு வந்தது.
முன்னதாக, அஸ்மின் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள் குழுவும் வெவ்வேறு பேருந்துகளில் வந்திருந்தனர்.
அஸ்மின் மற்றும் பாஸ் இன்று அகோங்கை எதிர்கொள்ளும் கடைசி குழுவில் ஒரு பகுதியினர் ஆவர்.
இக்குழுவினருடன் முஹைதீன் யாசினும் அகோங்கை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அவர் இன்னும் வரவில்லை.
பிற்பகல் 2.26 : அம்னோ மற்றும் தேசிய முன்னணி (தே.மு.) எம்.பி.க்களுடன் மற்றொரு பேருந்து இஸ்தானா நெகாராவுக்கு வருகிறது.
பேருந்தில் காணப்பட்டவர்களில் மசீச தலைவர் வீ கா சியோங்கும் ஒருவர்.
இந்தக் குழுவில் 21 எம்.பி.க்கள் – பெரும்பாலும் தே.மு.-யில் – ஹிஷாமுடின் உசேன் (செம்ப்ரோங்) அஸலினா ஓத்மான் சைட் (பெங்கேராங்) மற்றும் எம் சரவணன் (தாப்பா) ஆகியோர் இருந்ததாக நம்பப்படுகிறது.
பிற்பகல் 2.20 : துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசல் அஸுமு உட்பட பெர்சத்து எம்.பி.க்களை ஏற்றிச் சென்ற பேருந்து அரண்மனையிலிருந்து புறப்பட்டது.
சந்திப்பை முடித்துவிட்டு வெளியேறும் போது ஜாஹிட் ஊடகங்களுக்குக் கை அசைத்தார்.
பிற்பகல் 1.50 : அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இஸ்தானா நெகாராவுக்கு வந்தார்.
அம்னோ குழுவுடன் அல்லாமல், அவர் தனித்தனியாக வந்தார்.
பிற்பகல் 1.20 : இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்ற அம்னோ எம்.பி.க்களுடன் பேருந்தில் அரண்மனைக்கு வந்தார்.
மதியம் 1 : பெர்சத்து எம்.பி.க்களை ஒரு பேருந்து அரண்மனைக்கு ஏற்றி வந்தது.
அதில், ஜெலி எம்.பி. முஸ்தபா முகமட் இருந்தார்.
பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உள்ளிட்ட அம்னோ பிரதிநிதிகளும் வந்துகொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்செய்தி வளர்ச்சியை மலேசியாகினி நேரடியாக வெளியிடுகிறது.
ஜிபிஎஸ் அமைதியாக இருக்கிறது
மதியம் 12.30 – சரவாக், கூச்சிங்கில், செய்தியாளர்களிடம் பேசிய பெட்ராஜயா எம்பி ஃபாடில்லா யூசோஃப், 17 ஜிபிஎஸ் எம்.பி.க்களும் லுபோக் அந்து எம்.பி. ஜுகா முயோங்கும் மாமன்னரை இயங்கலையில் சந்தித்ததாகக் கூறினார்.
தங்களின் சட்டரீதியான அறிவிப்பை (எஸ்டி) சரிபார்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொருவராக எதிர்கொண்டதாகவும், அவர்கள் சுய விருப்பத்தின் பேரில் அதில் கையெழுத்திட்டதாகவும் ஃபாடிலா கூறினார்.
எவ்வாறாயினும், கூட்டணி யாரை ஆதரித்தது என்பதை வெளிப்படுத்த ஜிபிஎஸ் தலைவர்கள் மீண்டும் மறுத்துவிட்டனர், அகோங் தான் அதை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பிந்துலு எம்பி தியோங் கிங் சிங், தற்போது கோலாலம்பூரில் இருப்பதால், அகோங்கை அவர் நேரடியாக எதிர்கொள்வார் என்று ஃபாடில்லா கூறினார்.
___________________________________________________________________________________
காலை 11.50 : இஸ்தானா நெகாராவை விட்டு சில எம்பிக்கள் வெளியேறினர்.
அடுத்தக் குழுவினர் – அம்னோ மற்றும் பெர்சத்துவைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் அடங்கியது – பிற்பகல் 2 மணிக்கு அகோங்கை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 11.35 : பெக்கான் எம்பி நஜிப் ரசாக் இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார், அவர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்குச் செல்கிறார் என்று நம்பப்படுகிறது.
1எம்டிபி ஊழல் வழக்கின் விசாரணைக்காக, இன்று காலை 9.30 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.
நஜிப்புக்குப் பிறகு, அன்னுவார் மூசா (கெதேரே) உட்பட பல அம்னோ எம்.பி.க்கள் வெளியேறினர்.
அகோங்கை எதிர்கொள்ளும் இரண்டாவது குழுவில் முஹைதீன், அஸ்மின், நஜிப்பும் அடங்குவர்
காலை 10.40 : பல எம்பிக்களைச் சுமந்து செல்லும் பல பல்நோக்கு வாகனங்களும் (எம்பிவி) பேருந்துகளும் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தன.
பேருந்தில் காணப்பட்டவர்களில், சலிம் ஷாரிஃப் (ஜெம்புல்) மற்றும் ஷாஹிடான் காசிம் (ஆராவ்) ஆகிய இரண்டு அம்னோ எம்.பி.க்களும் அடங்குவர்.
இரண்டாவது குழுவில், 25 பெர்சத்து, அம்னோ மற்றும் சுயேச்சை எம்.பி.க்கள் இருந்தனர்.
அவர்களில் பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் (பாகோ), அஸ்மின் அலி (கோம்பாக்), டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (கோல லங்காட்), லாரி ஸ்ங் (ஜுலாவ்), கைரி ஜமாலுடின் (ரெம்பாவ்) மற்றும் நஜிப் ரசாக் (பெக்கான்) ஆகியோரும் அடங்குவர்.
ஸ்ங் இரண்டாவது பேருந்தில் இருந்தார் – அப்பேருந்து பெர்சத்து எம்.பி.க்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது – அம்னோ எம்.பி.
முன்னதாக, பட்டியலில் முஹைதீன் மற்றும் அஸ்மில் காலை 11 மணிக்கு மன்னரை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் அவர்கள் பிற்பகலில் எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 10.10 : இதுவரை இஸ்தானா நெகாராவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நுழையவில்லை, சபா மற்றும் சரவாக் மக்கள் பிரதிநிதிகளின் முன் அமர்வு பெரும்பாலும் தொலைதொடர்பு மூலம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இப்போது இஸ்தானா நெகாராவுக்கு வந்த பிரமுகர்களில் அரசாங்கத் தலைமை செயலாளர் முகமட் ஸூகி அலி மற்றும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருன் ஆகியோரும் அடங்குவர்.
இதற்கிடையே, மாமன்னர் முன் ஆஜராக அழைப்பு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறின.
மாமன்னரை எதிர்கொள்ளும் அமர்வு சபா மற்றும் சரவாக் எம்.பி.க்களுடன் தொடங்கியது
காலை 9.30 : சபா மற்றும் சரவாக்கைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதல் குழு – 24 பேர் – மாமன்னரை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சரவாக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 18 பேரும், பெர்சத்து சபாவைச் சேர்ந்த ஐவரும் அடங்குவர்.
அவர்கள் அகோங்கை இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்களா அல்லது தொலை தொடர்பு மூலம் சந்தித்தார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.