நிறுவன சீர்திருத்தங்களைத் தொடர வேண்டுமென சுஹாகாம் புதிய அரசுக்கு வலியுறுத்தியது

நியமிக்கப்படும் புதிய பிரதமரும் அரசாங்கமும், அரசு நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நம்புவதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறியது.

பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வில் கோவிட் -19 ஏற்படுத்திய தாக்கங்களைக் கையாள்வதில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றாலும், புதிய அரசாங்கத்தின் பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் மனித உரிமைகளும் முக்கிய உந்துதலாக இருக்க வேண்டும் என்று சுஹாகாம் சொன்னது.

மனித உரிமைகள் பிரச்சினைகளை முடிந்தவரை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் ஆதரிக்கவும் ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் அவசியம் என்று அது கூறியது.

மலேசியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஜனநாயக நடைமுறையை வளர்க்கவும் வேண்டுமென சுஹாகாம் கூறியது

புதிய அரசாங்கத்தை அமைக்க, பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான சட்ட விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட ஆணையின் படி, அமைச்சுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் சுஹாகாம் தெரிவித்தது.