இஸ்மாயில் சப்ரி அதிகாரப்பூர்வமாகப் பணியைத் தொடங்கினார்

இன்று, புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அதிகாரப்பூர்வமாகத் தனது பணிகளைத் தொடங்கினார்.

காலை சுமார் 8.25 மணியளவில், பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பெர்டானா புத்ராவின் பிரதான பகுதியில், இஸ்மாயில் சப்ரியை, அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் ஸூகி அலியும் பிரதமர் துறையின் மூத்தத் துணைப் பொதுச் செயலாளர் ஜமீல் ராகோனும் வரவேற்றனர்.

பொதுச் சேவை துறை தலைமை இயக்குநர், முகமட் கைருல் அடிப் அப்து இரஹ்மான், சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருன், காவல்துறைத் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சனி மற்றும் மலேசிய ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் அஃபெண்டி புவாங் ஆகியோரும் உடனிருந்தனர்.

இஸ்மாயில் சப்ரி, ஆர்வத்துடன் காணப்பட்டார், கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேர அட்டையைத் திரையிட்டு, வருகையைப் பதிவு செய்தபின், வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

61 வயதான இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகச் சனிக்கிழமை பதவியேற்றார்.

பெர்டானா புத்ராவில் வருகையைப் பதிவுசெய்த பிறகு, இஸ்மாயில் சப்ரி கடந்த புதன்கிழமை ஏற்பட்ட கூனோங் ஜெராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையைப் பார்வையிட, தனது முதல் பணி தொடர்பான பயணத்தைக் கெடாவுக்கு மேற்கொள்ள உள்ளார்.

இதுவரை, அந்நிகழ்வினால் ஐந்து உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த வெள்ளத்தால் யான்-இல் சுமார் 800 வீடுகளும் கோலா முடாவில் 200 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பெர்னாமா