அம்னோ இளைஞர் பிரிவு, அவர்களின் துணைத் தலைவர் முகமட் ஹசானை நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் நோக்கம் என்ன என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், அம்னோ – அதன் இளைஞர் பிரிவு உட்பட – தற்போதைய தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸீஸுடன் திருப்திகொள்ளவில்லை என்பது பொதுமக்களுக்குத் தெரியும் என்று கூறினார்.
அம்னோ இளைஞர் பிரிவினருக்கு, முன்பு அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜிஎல்சி) எந்தப் பதவியும் கிடைக்கவில்லை, பெரும்பாலான பதவிகள் நிதி அமைச்சின் மூலமே நியமிக்கப்பட்டன என்று சரண் கூறினார்.
“ஜிஎல்சி பதவிகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்காக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி துசுகி, முகமட்டை நிதி அமைச்சர் பதவிக்கு முன்மொழிகிறாரா?” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கேட்டார்.
முன்னதாக, புதியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அமைச்சரவையில் அம்னோ துணைத் தலைவர் முகமதைக் கொண்டு வருமாறு அஷ்ராஃப் பரிந்துரைத்தார்.
அஷ்ராஃப் வாஜ்டியின் கூற்றுபடி, “மக்களுடன் தொடர்பில் உள்ள, அவர்களின் நாடிதுடிப்பைப் புரிந்துகொண்ட “தனிநபர்களால் இந்தப் பதவி வகிக்கப்பட வேண்டும்.
முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் நியமனம், வங்கிக் கடன் தடையை அமல்படுத்துதல், ஐ-சித்ரா ஊழியர் சேமநிதியை (ஈ.பி.எஃப்.) திரும்பப் பெறுதல் மற்றும் மக்கள் உதவித் தொகுப்புகளுக்கு மதிப்பு சேர்த்தல் போன்ற பல கோரிக்கைகளை நன்றாக செயல்படுத்த முடியும் என்று அஷ்ரஃப் கூறியுள்ளார்.
பினாமிகளையும் சொந்த பந்தங்களையும் தவிர்க்கவும்
முகமட் தற்போது நெகிரி செம்பிலானில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கிறார், ஆனால் அவரை அமைச்சரவை உறுப்பினராகத் தகுதி பெறச் செய்ய மேலவை உறுப்பினராக நியமிக்க வேண்டும்.
அம்னோ இளைஞர் பிரிவு ஜிஎல்சியில் எந்தவொரு பதவியைப் பற்றியும் கவலைப்படவில்லை என்று அஷிராஃப் வாஜ்டி கூறினால், அரசாங்கத்தின் எந்தச் சலுகையையும் ஏற்க மாட்டேன் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றார் சரண்.
“அதுமட்டுமின்றி, ஜிஎல்சியில் அரசியல் நியமனங்களை அந்தந்த தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அஷ்ராஃப் வலியுறுத்த வேண்டும்.
“அரசியல் நியமனங்களால் பல ஜிஎல்சிக்கள் மக்களின் வரிப்பணத்தில் பாதுகாக்கப்படுகின்றன, பொதுமக்களில் பலர்… மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) போன்று வேலை இழக்க நேரிடுகிறது.
“ஊழியர்கள் ஒவ்வொரு வேலை அமைப்பின் முதுகெலும்பாக உள்ளனர், ஆனால் அரசியல் நியமனங்களின் தவறான நிர்வாகத்தால், வேலை இழக்கும் முதல் குழுவினராக இவர்களே உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
சரனின் கூற்றுப்படி, அரசியல்வாதிகளின் பினாமிகள், ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை அகற்றிவிட்டு, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று பிஎஸ்எம் விரும்புகிறது.
“இதன்வழி, தொழிலாளர்கள் ஜிஎல்சியால் தவறாக நிர்வகிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் அது அவர்களின் சோற்றுப் பானை,” என்று அவர் கூறினார்.