வெள்ளப் பகுதிக்கு அம்னோ எம்.பி.க்களுடன் சென்ற பிரதமர் விமர்சிக்கப்பட்டார்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குஅதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் அவருடன் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் படம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அவர் விமர்சனங்களுக்கு ஆளானார்.

வெள்ளப் பகுதிகளில் ஒன்றான கோலா முடாவில், பிரதமரின் வருகையை வரவேற்ற பெரிய விளம்பரப் பலகைகளையும் விமர்சகர்கள் சர்ச்சைக்குள்ளாக்கினர்.

இஸ்மாயில் சப்ரி நேற்று கெடாவுக்கு அரசு விமானத்தில் சென்றார்.

அப்பயணத்தில், அம்னோ எம்.பி.க்கள் – படத்தில் இருப்பது போல் – மஹ்ட்சீர் காலிட் (பாடாங் தெராப்), தாஜுட்டின் அப்துல் இரஹ்மான் (பாசிர் சாலாக்), இஸ்மாயில் முகமது சையத் (கோலா கிராவ்), ஹசான் ஆரிஃபின் (ரொம்பின்) மற்றும் முகமது சலீம் ஷெரீப் (ஜெம்புல்) ஆகியோர் அவருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்மாயில் சப்ரியுடன் அம்னோ மகளிர் தலைவர் நொராய்னி அஹமதுவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்மாயில் சப்ரியின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பல எம்.பி.க்களை மலேசியாகினி தொடர்புகொண்டு கருத்துக்களைப் பெற முயச்சிக்கிறது.

பி.கே.ஆர். இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் நசீர், நேற்றைய வருகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தைக் காட்டுவதாக் இல்லை என்றும், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தையும் துயரத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

“[…] அதைத் தவிர, பேரழிவு பகுதிக்கு நடுவில் ‘மலேசியாவின் 9-வது பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில் சப்ரி யாகோப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும்’ என்ற வார்த்தைகளுடன், ஒரு பெரிய விளம்பரப் பலகையை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?”

“அவர் மலேசியாவின் புதிய பிரதமர் என்று, சோகத்தில் மூழ்கியிருக்கும், பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள திட்டமா?” என்று இன்று அவர் ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

இஸ்மாயில் சப்ரியின் பரிவாரங்களுடன், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அந்த ஜொகூர் பாரு எம்.பி. சொன்னார்.

மேலும், பிரதமரும் அவரது பரிவாரங்களும் சமூக இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இருந்ததைக் காட்டும் வீடியோ பதிவும் வெளியாகியதாக அவர் கூறினார்.

“கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க எஸ்.ஓ.பி.க்களைத் தயார் செய்து அறிவித்த ஒரு பிரதமரின் உதாரணமா இது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

யான் மற்றும் கோலா முடாவில் சுமார் 1,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

அப்பேரழிவில் குறைந்தது ஐந்து உயிர்கள் பலியாகின.