கோவிட்-19 | இன்று மொத்தம் 20,837 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது ஒட்டுமொத்தமாக நாட்டில் 1,593,602 நேர்வுகளைக் கொண்டு வந்தது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் நேர்வுகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக 6,000-க்கும் கீழே இருந்தன.
இருப்பினும், மற்ற மாநிலங்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
சபா, பினாங்கு, ஜொகூர், கிளந்தான் மற்றும் பெர்லிஸ் ஆகிய ஐந்து மாநிலங்கள் இன்று மிக உயர்ந்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளன.
சபாவில், முதல் முறையாக, இந்த எண்ணிக்கை 3,000-க்கும் மேலாகப் பதிவானது. பினாங்கு முதல் முறையாக 2,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
மேலும், இன்று 211 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 14,553- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 18,613 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 511 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (4645), சபா (3376), பினாங்கு (2054), கெடா (1772), ஜொகூர் (1743), சரவாக் (1543), கிளந்தான் (1422), கோலாலம்பூர் (1284), பேராக் (1242), பகாங் (521), மலாக்கா (396), திரெங்கானு (383), நெகிரி செம்பிலான் (351), பெர்லிஸ் (74), புத்ராஜெயா (27), லாபுவான் (4).