‘தடுப்பூசி திட்டங்களில் தனியார் மருத்துவமனைகளின் ஈடுபாட்டை நிறுத்துவது நியாயமற்றது’

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பல தனியார் கிளினிக்குகள் இன்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (சிஐடிஎஃப்) 741 தனியார் கிளினிக்குகளுக்குத் தேசியக் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (பிக்) கீழான தடுப்பூசியை நிறுத்துமாறு அறிவுறுத்தியதை அடுத்து இந்த வலியுறுத்தல் வந்தது.

டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன்

“தனியார் கிளினிக்குகளில் தடுப்பூசிகளை நிறுத்தும் முடிவு நியாயமற்றது என்று நாங்கள் கருதுகிறோம். நம் நாடு விரைவில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய ஓர் இலக்கை கொண்டிருந்தால், அவர்கள் அனைத்து தரப்பினருடனும் நியாயமாக இருக்க வேண்டும்.

“தினசரி தடுப்பூசிகளைப் பதிவு செய்வதில் மலேசியாவின் வெற்றிக்குத் தனியார் கிளினிக்குகள் மிகப்பெரியப் பங்களிப்பாளர்களில் ஒன்றாகும். தடுப்பூசி திட்டத்தில் தனியார் மருத்துவமனை சேவைகளை நிறுத்தும் முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

“எஸ்ஐடிஎஃப் தனியார் கிளினிக்குகளின் சேவைகளை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை,” என்று எஸ்பி கேர் (SP Care) குழும நிறுவனர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள 741 தனியார் கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் கிளினிக்குகளில் தடுப்பூசி திட்டத்தை நிறுத்த வேண்டுமென்ற சிஐடிஎஃப் உத்தரவு குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

அந்த நியமனத்தை இரத்து செய்யும் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது.

இருப்பினும், சிஐடிஎஃப் முடிவை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) உட்பட பலர் வரவேற்கவில்லை.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை நிறுத்துவது அவர் கொடுத்த ஆலோசனைக்கு முரணானது என்று நூர் ஹிஷாம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி

இதற்கிடையில், எம்எம்ஏ தலைவர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி, தனியார் மருத்துவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைத் தனியார் சந்தையில் இருந்து வாங்கினாலும், பிக் ஏன் அவர்களின் சேவையை இரத்து செய்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

தடுப்பூசிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கான ஆரம்பம்

“தடுப்பூசி மையமாகத் தயாராவதற்கு, ஒரு தனியார் மருத்துவமனை குறைந்தது RM5,000 முதல் RM10,000 வரை செலவழிக்க வேண்டும். திட்டத்திற்குத் தயாரான பிறகு, சிஐடிஎஃப்-இன் திடீர் முடிவால் அவர்கள்ல் அதிர்ச்சியடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

தடுப்பூசி பாட்டில்களைச் சேமிக்கவும், அவற்றின் சீதோஷ்ண நிலையைச் சோதிக்கும்  தரவு லாக்கர்களுக்காகவும், ஒன்பது கிளினிக்குகளுக்குக் குளிர்சாதனப் பெட்டி கொள்முதலுக்காக தான் RM60,000-க்கும் அதிகமாக செலவழித்ததாக அவர் கூறினார்.

“இலாபம் முக்கியமல்ல. நான் உட்பட, பெரும்பாலான கிளினிக்குகள் சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) அடிப்படையில் பிக் திட்டத்தில் சேர்கின்றன.

“ஆனால், குறைந்தபட்சம் தனியார் கிளினிக்குகளை நஷ்டப்படுத்தாதீர்கள். மலேசியாவில் உள்ள அனைத்து தனியார் கிளினிக்குகளின் சார்பாக, நான் சிஐடிஎஃப் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்கிறேன்,” என்று அவர் கூறினார்.

டாக்டர் ஹாரி தினேஷ் மகாலிங்கம்

இதற்கிடையில், ரவாங்கைச் சேர்ந்த டாக்டர் ஹாரி தினேஷ் மகாலிங்கம், சிஐடிஎஃப் முடிவு அபத்தமானது என்று கூறினார்.

“தர்க்கம் மிகவும் எளிது. தனியார் கிளினிக்குகள் ஆரம்பச் சுகாதாரப் பாதுகாப்பு ஆகும். தடுப்பூசிகளும் கூட. எனவே, (பிக்) திட்டத்தில் தனியார் கிளினிக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மெகா தடுப்பூசி மையங்களுக்கு (பிபிவி) அல்ல.

“மெகா பிபிவியில் கோவிட் -19 தொற்றின் பரிமாற்ற விகிதம் தனியார் கிளினிக்குகளை விட அதிகமாக உள்ளது. இன்றுவரை தனியார் கிளினிக்குகள் தொடர்பான திரளைகள் இல்லை.

“இன்னொன்று, தடுப்பூசி போட நீங்கள் நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு தனியார் கிளினிக்கில் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும்,” என்று அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவதற்கான தேர்வு தனியார் மருத்துவமனைகளே

டாக்டர் அப்துல் ரஷீத் அப்துல் மஜீத்

அதே கருத்தைப் பகிர்ந்துகொண்டு, டாக்டர் அப்துல் ரஷீத் அப்துல் மஜீத், கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவதற்குத் தனியார் கிளினிக்குகளே சிறந்த வழி என்று கருத்து தெரிவித்தார்.

“கிராமப்புறங்களில் நம்மிடம் சுகாதாரக் கிளினிக்குகள் உள்ளன. ஆனால், எவ்வளவு பிபிவிகளை உருவாக்க முடியும். கிராமப்புறங்களில் எத்தனை மெகா பிபிவிகளை நாம் வழங்க முடியும்?

“ஆனால், நாடு முழுவதும் நம்மிடம் 8,000-க்கும் மேற்பட்ட தனியார் கிளினிக்குகள் உள்ளன. இவற்றைப் பிக் திட்டத்தில் முடிந்தவரை சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.