அமைச்சரவை பட்டியல் : பிரதமர் அகோங்கை விரைவில் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமைச்சரவை பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்க, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை விரைவில் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மலேசியாகினி பிரதமர் அலுவலக (பிஎம்ஓ) அதிகாரியை விசாரித்ததில், இந்த விஷயம் பிரதமரின் அட்டவணையில் சேர்க்கப்படவில்லை என்று கண்டறிந்தது.

“அது ஒரு வதந்தி. இதுவரை, எங்களுக்கு இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்த வாரம் நடைபெறலாம் என்று நாங்கள் நினைக்கிறோம், ஆனால் எங்களிடம் சமீபத்திய தகவல்கள் இல்லை,” என்று பெயர் குறிப்பிட மறுத்த ஓர் அதிகாரி மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக, தி வைப்ஸ் செய்தி தளம், மாமன்னர் இன்று இஸ்மாயிலைச சந்திப்பார் என்று அறிவித்தது.

புதிய அமைச்சரவை வரிசையைச் சமர்ப்பிப்பதில், இஸ்மாயில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார் என்று அம்னோ வட்டாரம் ஒன்று கூறியது -அவருக்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினரும் தங்களுக்கு ஓர் இலாகா கொடுக்கப்பட வேண்டும் என்று கோருவதாகத் தெரிகிறது.

“பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகள், தங்களின் அனைத்து அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் தக்கவைக்க விரும்புகிறார்கள், அதே நேரத்தில் அம்னோ (முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின்) கொடுத்ததை விட அதிகமாக கோருகிறது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, தனது குழுவுக்கு அதிக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதாகவும் அந்த ஆதாரம் கூறியது.

இருப்பினும், தக்கியுடின் ஹசான் முன்பு வைத்திருந்த பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அந்த ஆதாரம் கூறியது.

முன்னதாக, அவசரகாலச் சட்டம் குறித்த தக்கியுடின் ஹசானின் அறிக்கைக்கு அரண்மனை கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இது நடப்பதாகத் தெரிகிறது.

முஹைதீன் நிர்வாகத்தின்போது, ​​அம்னோவுக்கு ஒன்பது அமைச்சர் பதவிகளும் எட்டு துணை அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன.

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் – நொரைய்னி அஹ்மட் மற்றும் ஷம்சுல் அனுவார் நசாரா ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தனர், இது தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

பிரதமர் தனது அமைச்சரவை பட்டியலை நாளை வழங்குவார் என்றும் மாமன்னரின் ஒப்புதலைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.