பிரதமர் இன்று பிற்பகல் பி.எச். தலைவர்களைச் சந்திப்பார்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று மாலை பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கட்சி தலைவர்களைப் புத்ராஜெயா, புத்ரா பெர்டானாவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.

பிகேஆர் தகவல்தொடர்பு பிரிவு இயக்குநர், ஃபாஹ்மி ஃபட்ஸிலின் கூற்றுப்படி, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

“பிற்பகல் 2 மணிக்கு, பிரதமர் அலுவலகத்தின் அழைப்பின் பேரில், பிரதமர் அலுவலகத்தில், இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன், அன்வர் இப்ராகிம், முகமது சாபு மற்றும் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெறும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இஸ்மாயில் சப்ரி எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படாது என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், எதிர்க்கட்சிகளுடனான ஒத்துழைப்பு கோவிட் -19 பிரச்சினை மற்றும் பொருளாதார மீட்பு ஆகியவற்றை உள்ளடக்கியத் தேசியப் புனர்வாழ்வு மன்றம் (எம்பிஎன்) மற்றும் கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ளும் சிறப்பு குழு ஆகியவற்றுடன் மட்டுமே என்று பிரதமர் கூறினார்.

பி.எச். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை, ஆனால் டிஏபி அதைப் பரிசீலிக்க தயாராக உள்ளது என்று லிம் சுட்டிக்காட்டினார்.