மலாய் பெண் டிக்டோக் பார்வையாளர்களை சரளமாக தமிழ், கான்டோனீஸ் பேசுவதன் மூலம் வியக்க வைக்கிறார்.

பர்கர் ஸ்டால் உரிமையாளர் பாத்திமா மாட் காசர் சமீபத்தில் டிக் டோக்கில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் தமிழ் மற்றும் கண்டோனீஸ் மொழிகளில் தனது அண்டை வீட்டுக்காரர்களுடன்  சரளமாக பேசுவதை காட்டுகிறது.

டிக்டோக்கில் தனது முதல் தோற்றத்தில், ஈப்போவைச் சேர்ந்த பாத்திமா, தனது பக்கத்து வீட்டுக்காரருடன் தமிழில் பத்து கஜாவுக்குச் செல்வதாகக் கூறி அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்.

இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

54 வயதான பாத்திமா ஈப்போவின் பன்டோங்கில் இந்தியர்கள் அதிகம் வசித்த சுற்றுப்புறத்தில் தான் வளர்ந்தபோது தனக்கு பல இந்திய நண்பர்கள் இருந்ததாக கூறினார்.

இப்பகுதியில் வாழ்ந்த சில மலாய் குடியிருப்பாளர்களில் ஒருவராக இருந்த அவர், தனது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் உதவியுடன் தமிழ் பேச கற்றுக்கொண்டார்.

மற்றொரு வீடியோவில், அவர் தனது மற்ற அண்டை அயலாருடன் கான்டோனீஸ் பேசுகிறார். தன்னுடைய பழைய நண்பரிடமிருந்து கான்டோனீஸ் கற்றுக்கொண்டதாக கூறினார்.

“நான் எனது 20 வயதில் ஒரு விற்பனைப் பெண்ணாக வேலை செய்தேன், பல வாடிக்கையாளர்களை அணுக வேண்டியிருந்தது, அதனால் என் மொழித் திறனும் மேம்பட்டது.

எனினும், என் கான்டோனீஸ் என் தமிழோடு ஒப்பிடும்போது இன்னும் சரளமாக இல்லை,” என்று அவர் கூறினார்.

அவரது பலமொழி எப்படி அவருக்கு உதவியது என்று கேட்டபோது, ​​பாத்திமா மலாய் மொழியில் அரசு அலுவலகங்களில் படிவங்களை நிரப்ப பலருக்கு உதவி செய்ததாக கூறினார்.

நேற்று, கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுவதற்கு  முன்பு ஒருவறுக்கு மலாய் மொழியில் உள்ள பாரத்தை பூர்த்தி செய்ய  உதவினேன் என்றார்.

மலாய் மொழியில் எழுதுவதில் சிக்கல் உள்ள வயதானவர்களைப் பார்க்கும்போது, ​​அவர்களுடன் தமிழில் தொடர்புகொள்வதன் மூலம் நான் அவர்களுக்கு உதவுவேன்.

நான் தமிழில் உரையாடலைத் தொடங்கும்போது அவர்களில் பெரும்பாலோர் அதிர்ச்சியடைவார்கள், ”என்று அவர் கூறினார்.

பாத்திமா தனது குழந்தைகளை தமிழ் மற்றும் கான்டோனீஸ் இரண்டையும் கற்க ஊக்குவிப்பதாகவும், அதனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.