#லாவான் சட்ட உதவிநிதி மற்றும் தண்டம் செலுத்தப் பங்களித்த பொதுமக்களுக்கு மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) நன்றி தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை, டத்தாரான் மெர்டேக்காவில், மெழுகுவர்த்தி ஏந்தல் ஒன்றுகூடலில் பங்கேற்றதற்காகத் தடுத்து வைக்கப்பட்ட 31 ஆர்வலர்களுக்கான தண்டத்தொகைக்குப் பணம் செலுத்துவதற்காக இந்த உதவி நிதி முன்பு தொடங்கப்பட்டது.
அவர்களால் RM92,800 நிதி வசூலிக்க முடிந்தது என்று எஸ்எஸ்ஆர் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“ஒரே நாளில், மிகக் குறுகிய காலத்தில், RM 92,800 பங்களிப்பு செய்த பொது மக்களின் ஆதரவால் நாங்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தோம்.
“இந்தப் பங்களிப்பு 668 பேரின் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது, இது சராசரியாக RM139-யை உள்ளடக்கியது, மேலும் பலர் RM10 மற்றும் RM20 எனப் பங்களித்தனர்.
“மலேசியாவில், ஜனநாயகமயமாக்கல் செயல்முறையை நகர்த்துவதற்கும், சாதாரண மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கும், கூட்டு முயற்சியில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் #லாவான் கோரிக்கையை ஆதரிக்கிறது என்பதை இது காட்டுகிறது,” என்று அந்தக் குழு மேலும் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 19-ம் தேதி, டாங் வாங்கி காவல் நிலையத்தில் 17 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் என மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்ய எடுத்த முயற்சிகளைக் காவல்துறையினர் புறக்கணித்ததாகவும், பங்கேற்பாளர்களில் சிலரைப் பிளாக் மரியா வாகனத்திற்கு இழுத்து சென்றதாகவும் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.
பங்கேற்பாளர்கள் தங்கள் உரிமைகள் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், தங்களுக்கு RM 2,000 தண்டம் விதிக்கப்பட்டதாகவும் கூறினர்.
“#லாவான் பேரணி மற்றும் எங்களின் மற்ற தொடர் போராட்டங்களுக்கான செலவு பற்றிய விரிவான அறிக்கை விரைவில் அறிவிப்போம்.
“#லாவான் இயக்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை, நாங்கள் எங்களின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் உறுதியாக காப்பாற்றுவோம்.
“செயலகம், #லாவான் சட்ட மற்றும் தண்டம் செலுத்துவதற்கான உதவி நிதி பிரச்சாரத்தை இதன் மூலம் நிறைவு செய்கிறது,” என்று அது கூறியது.