‘அம்னோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இஸ்மாயில் சப்ரி அன்வாருடன் பேசினார்’

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்தை, எதிர்க்கட்சிகள் சிக்கலாக்காது என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“நாட்டின் சூழல் மற்றும் திட்டங்களும் மக்களுக்கு ஆதரவாக இருந்தால், நாங்கள் அதை கடினமாக்க மாட்டோம் என்று நாங்கள் (பிரதமரிடம்) கூறியுள்ளோம்.

நேற்று, புத்ராஜெயா, பெர்டானா புத்ரா கட்டிடத்தில், இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்த பிறகு, ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், “மக்கள் சார்பு திட்டங்களும் கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கும் திட்டமும் மிகவும் பயனுள்ளதாக இருந்தால், நாங்கள் அதனை வரவேற்போம் என உத்தரவாதம் அளித்துள்ளோம்.

இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான நம்பிக்கை பிரேரணை, அடுத்த மக்களவை அமர்வில் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகிய இரு எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமரின் அலுவலக அழைப்பின் பேரில் நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மூன்று தலைவர்களும் தனி வாகனங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பெர்டானா புத்ரா கட்டிடத்திற்கு வந்து, சுமார் 3.30 மணியளவில் திரும்பினர்.

முன்னதாக, குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசலே ஹம்ஸா இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நாடாளுமன்றத்தில் நடத்த அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை செப்பாங் எம்பி முகமது ஹனிபா மைதீன் ஆதரித்தார், பெரா எம்.பி., பிரதமராகப் பதவி ஏற்றிருந்தாலும் நம்பிக்கை பிரேரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க நேரம் ஒதுக்கிய இஸ்மாயில் சப்ரிக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.

“நான் நன்றி கூறிக்கொள்கிறேன் … இஸ்மாயில் சப்ரி அம்னோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அன்வார் மற்றும் டிஏபியுடன் பேசியுள்ளார்.

“நான் அவரைக் கேலி செய்தேன், ‘அன்வார் இல்லை டிஏபி இல்லை’, நிலைமை மாறியது போல் தெரிகிறது என்ற என்னிடம், (எல்லா கட்சிகளுடனும்) ஒத்துழைப்பு அவசியம் என்ற மாமன்னரின் கட்டளை இது என்று அவர் கூறினார்,” என்று அன்வார் கூறினார்.

சந்திப்பின் போது, ​​லிம் வங்கி கடன் ஒத்துவைப்பு உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளையும் எழுப்பினார், அதே நேரத்தில் முகமட் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்றின் கடுமையான விளைவுகள் பற்றிய பிரச்சினையை எழுப்பினார்.

கூட்டத்தில், தேசியப் புனர்வாழ்வு மன்றப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இந்த விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்று அந்தப் போர்ட்டிக்சன் எம்.பி. கூறினார்.

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் முன்மொழிந்த, ஒரு மூத்த அமைச்சருக்கு இணையான ஊதியம் மற்றும் வசதிகளை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்கவில்லை என்றும் அன்வார் கூறினார்.

“எனக்கு அதில் ஆர்வமும் இல்லை, அது ஒரு பிரச்சினையாக மாற நான் விரும்பவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எங்களுக்காக எதையும் கேட்க வரவில்லை என்று கூறி வருகிறோம், எங்கள் பிரச்சினை குறிப்பாக மக்களின் பொருளாதாரம் மற்றும் கோவிட்-19 தொற்று பற்றியது,” என்று அவர் கூறினார்.